வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தூத்துக்குடி உட்பட 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது. மேலும், தமிழ்நாட்டிற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் வங்கக்கடலில் புயல் உருவாவது இயல்பான ஒன்றாக மாறியிருக்கிறது. அந்த வகையில், இந்த ஆண்டும் தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. தொடக்கத்தில், காற்றழுத்த தாழ்வு ஏற்பட்டிருந்த நிலையில், கொஞ்சம், கொஞ்சமாக வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாகவும், தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாறியிருக்கிறது. இந்நிலையில் தான் தமிழ்நாட்டிற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழ்நாட்டை நோக்கி நகர்ந்து வருவதால் தற்போது சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, கடலூர், நாகை, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது.