தூத்துக்குடி ஸ்ரீ சங்கரராமேஸ்வரர் திருக்கோயில் (கோமஸ்புரம்) குத்தகை நிலத்தில் போலியாக/விதிமுறைகளை மீறி சொத்துவரி ஆவணங்கள் வழங்கி, பல லட்சம் ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்றத் தலைவர் சரவணகுமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் சமூக ஆர்வலர் அக்ரி பரமசிவன் மனு அளித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் தெய்வசெயல்புரத்தைச் சேர்ந்த அக்ரி பரமசிவன் என்பவர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
தூத்துக்குடி ஸ்ரீ சங்கரராமேஸ்வரர் திருக்கோவிலுக்கு சொந்தமான மாப்பிள்ளையூரணி கிராம புல எண்: 130/3 மற்றும் 130/4 ஆகியவற்றின் பரப்பளவான சுமார் 6.51 ஏக்கர் புஞ்சை நிலையானது தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாக அதிகாரி கட்டுப்பாட்டில் உள்ள இடமாகும்.
இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோமஸ்புரம் பகுதியின் நிலமானது வணிக பயன்பாட்டிற்கு அல்லாத புஞ்சை வகை சார்ந்ததாகவும், இத்தகைய புஞ்சை நிலத்தில் விவசாயம் சார்ந்த பணிகளுக்கான குத்தகை மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்கிற விதிகள் உள்ளன ஆனால் இக்கோவில் நிலத்தில் சட்டவிதிகளை மீறி வணிக நோக்கத்துடன் ECR மார்க்கெட் - சூர்யா அங்காடி எனும் வணிக வளாக பகுதியில் சுமார் 21 வியாபார கடைகள், வணிக கட்டுமானங்கள், வணிக நிறுவனங்கள் முறைகேடான வகையில் கடந்த நான்கு மாதங்களாக செயல்பட்டு வந்துள்ளன.
தூத்துக்குடி ஸ்ரீ சங்கரராமேஸ்வரர் திருக்கோவிலுக்கு சொந்தமான கோமஸ்புரம் பகுதியில் முறைகேடாக செயல்பட்டு வந்த ECR மார்க்கெட் - சூர்யா அங்காடி உள்ளிட்ட 21 கடைகளுக்கும், ஏற்படுத்தப்படாத வணிக கடைகள்/ இல்லாத வணிக கடைகளுக்கு போலியான வகையில் விதிமுறைகளை மீறி சுமார் 51 வணிக நிறுவனங்களுக்கு சொத்துவரி ஆவணங்களை மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்றத் தலைவர் சரவணகுமார் வழங்கி உள்ளார்.
தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்றத்தில் சார்பில் விதிமுறைகளை மீறி கோமஸ்புரம் வார்டு எண் 2 ற்கு கதவு இலக்க எண்கள் 2/36/19 -ல் இருந்து தொடங்கி தொடர்ச்சியாக 2/36/70 வரையிலான சுமார் 51 கதவு இலக்கங்களைக் கொண்டு, சொத்து வரி ஆவணங்கள்: 2024-2025/27/1/11/5637 முதல் 2024-2025/27/1/11/5668 வரை 23.08.2024 அன்றும், சொத்துவரி ஆவணங்கள்: 2024-2025/27/1/11/6165 முதல் 2024-2025/27/1/11/6168 வரை 05.09.2024 அன்றும், சொத்துவரி ஆவணங்கள்: 2024-2025/27/1/11/6217 முதல் 2024-2025/27/1/11/6232 வரை 06.09.2024 அன்று முறைகேடான வகையில் வழங்கப்பட்டுள்ளன.
இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோமஸ்புரம் பகுதியில் சட்ட விதிகளுக்கு எதிராக பல்வேறு தரப்பினர் ஆக்கிரமிப்பு செய்திடவும், புஞ்சை நில கோவில் குத்தகை நிலத்தில் வணிக நிறுவனங்கள் ஏற்படுத்திடவும், அரசின் விதிமுறைகளுக்கு எதிரான போலி ஆவணங்கள் ஏற்படுத்தியும், இல்லாத வணிக கடைகளுக்கு/ஏற்படுத்தப்படாத வணிக நிறுவனங்களுக்கு கதவு எண், சொத்து வரி உள்ளிட்ட பல்வேறு போலி ஆவணங்கள் வழங்கியதன் மூலம் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்றத் தலைவர் சரவணகுமார் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான வருவாய் குற்றங்களை புரிந்துள்ளார்.
உயர்திரு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தணிக்கை உதவி இயக்குநர் ( ஊராட்சிகள்) ஆகியோர் மேற்படி ஸ்ரீ சங்கரராமேஸ்வரர் திருக்கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் முறைகேடான வகையில்/போலி ஆவணங்களை வழங்கி பல்வேறு சட்டவிதிமீறல்களில்/குற்றச் செயல்களில் ஈடுபட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்றத் தலைவர் சரவணகுமார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
Collectorate Petition: 2024/9005/28/437799/1125 date: 25.11.2024