வன்முறையை தூண்டும் வகையில் பேசிய, அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் வைகைச்செல்வன் மீது நடவடிக்கை எடுக்க கோரி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திமுகவினர் மனு அளித்துள்ளனர்.
இது தொடர்பாக தூத்துக்குடி வடக்கு மாவட்ட திராவிட முன்னேற்ற கழகத்தின் வழக்கறிஞர் அணி அமைப்பாளர் மோகன்தாஸ் சாமுவேல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார் கூறியுள்ளதாவது :
கடந்த 07.02.2021 அன்று திமுக கழக அமைப்புச் செயலாளரும், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான ஆர் எஸ். பாரதி சென்னை அம்பத்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு ஆளுங்கட்சியின் முதல்வர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் கொடுக்கப்பட்ட ஊழல் புகார் குறித்தும் அதன் மீது சென்னை உயர் நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது பற்றியும் தமிழ்நாட்டில் உள்ள சட்டம் ஒழுங்கு சீர்கேடு பற்றி பல்வேறு ஆதாரங்களுடன் பேசினார்.
இதற்கு அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளர் வைகைச்செல்வன், திமுகவின் கழக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி மீது உண்மைக்குப் புறம்பாக அனைத்து செய்திகளையும் திரித்து கூறியதோடு மட்டுமல்லாமல் அவரைப்பற்றி பொதுவெளியில் தரக்குறைவாக அருவருக்கத்தக்க பேச்சுக்கள் மூலம் அதிமுக கட்சியினரை அறிக்கை மூலம் வன்முறையில் ஈடுபடத் தூண்டி வருகிறார்.
எனவே சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபட்டு கொலை மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல் அவதூறு பரப்புதல் மக்களிடையே வன்முறையை தூண்டி விட்டு சட்ட ஒழுங்கை சீர் குலைத்தல், நீதிமன்ற உத்தரவை தனிப்பட்ட ஆதாயத்திற்காக திரித்துக் கூறி சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டுவரும் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் வைகைச்செல்வன் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
உடன் திமுக வழக்கறிஞர் பிரிவு மாவட்ட துணை அமைப்பாளர் சீனிவாசன், மாநகர அமைப்பாளர் சாமுவேல் ராஜேந்திரன், மாநகர துணை அமைப்பாளர் குபேர் இளம்பரிதி, பாலசுப்பிரமணியன், மற்றும் செல்வ திலக் மற்றும் பலர் இருந்தனர்.