• vilasalnews@gmail.com

அறிமுகத் தேர்தலிலேயே சாதனை செய்த பிரியங்கா காந்தி : தூத்துக்குடியில் சி.எஸ்.முரளிதரன் தலைமையில் கொண்டாட்டம்!

  • Share on

கேரளா மாநிலம் வயநாடு நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி 4 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக மக்களவை உறுப்பினராகத் தேர்வாகியதை வரவேற்று தூத்துக்குடியில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.


ராகுல் காந்தி, 2024 மக்களைவைத் தேர்தலில் வயநாட்டிலும், உ.பி.யின் ரேபரேலியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். இதனால் வயநாட்டிற்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிட்டு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) வேட்பாளர் சத்யன் மொகேரி மற்றும் பாஜக வேட்பாளர் நவ்யா ஹரிதாஸ் ஆகியோருக்கு எதிராகப் 6 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று,  பிரியங்கா காந்தி 404,619 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.


2024 மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தி 6,47,445 வாக்குகள் பெற்று 3,64,422 வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றார். ஆனால், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, தனது அறிமுகத் தேர்தலிலேயே தனது சகோதரர் ராகுல் காந்தியை மிஞ்சிவிட்டார்.


அதே போல, ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றதையும், கர்நாடகாவில் மூன்று இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன் தலைமையில், தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் முன்பு பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.


இந்த நிகழ்ச்சியில், கிழக்கு மண்டல தலைவர் மிக்கேல், வடக்கு மண்டல தலைவர் சின்ன காலை, மாநகர் ஊடகப்பிரிவின் மாவட்டத் தலைவர் ஜான் சாமுவேல், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் வெங்கட் சுப்பிரமணியன், மாவட்ட துணைத் தலைவர்கள் டேவிட் வசந்தகுமார், ரஞ்சிதம் ஜெபராஜ், அங்குசாமி, மாவட்டச் செயலாளர்கள் நாராயணசாமி, அந்தோணி ஜெயராஜ், கிருஷ்ணன், கதிர்வேல், மாரியப்பன், வார்டு தலைவர்கள் மகாலிங்கம், பாலா, பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

விளாத்திகுளம் அருகே அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து!

கோவில் யானை தாக்கி உயிரிழந்த இருவர் குடும்பத்திற்கு முதல்வர் நிதியுதவி!

  • Share on