தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பொதுமக்களின் புகார் மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்துள்ளார்.
அதன்படி, மாவட்ட காவல் அலுவலகம் மற்றும் காவல் நிலையங்களில் புகார் அளிக்க வரும் பொதுமக்களுக்கு காவல் அலுவலக வரவேற்பாளர்கள் புகார் மனு பதிவு செய்ததற்கான வரவேற்பு சீட்டை (Reception Slip) மனுதாரருக்கு உடனடியாக வழங்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.
மாவட்ட காவல் அலுவலகம் மற்றும் காவல் நிலையங்களில் தபால் மூலம் வரும் பொதுமக்களின் புகார் மனுக்கள் மீது 5 நாட்களுக்குள் புகார்தாரரை தொடர்பு கொண்டு விசாரணை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார்.
காவல் நிலைய விசாரணையில் திருப்தி அடையாத மற்றும் புதிதாக மனு கொடுக்க வரும் பொதுமக்கள் ஒவ்வொரு புதன்கிழமையிலும் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டத்தில் கலந்துகொண்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களை நேரடியாக சந்தித்து தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் முதலமைச்சர் தனிப்பிரிவு புகார் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் அலுவலகத்தில் புதிதாக "சிறப்பு பிரிவையும்" மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் 22.11.2024 அன்று துவக்கி வைத்தார். எனவே தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் மேற்படி திட்டங்கள் மூலம் பயன்பெறுமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.