தூத்துக்குடி மாவட்டம், புதூர், விளாத்திகுளம் சுற்றுவட்டார விவசாய நிலங்கள் இருக்கும் பகுதிகளில் பன்றிகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாகவும் அதனை கட்டுப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம் வட்டம், அயன்கரிசல் குளம் கிராமத்தை சேர்ந்த ஆண்டி கோனார் மகன் மோகன் ராஜ் ( 60 ) இன்று காலை ஊருக்கு வடபுறம் உள்ள தனது மக்காச் சோளம் பயிரிட்ட நிலத்திற்கு, இரண்டு தினங்களுக்கு முன் பெய்த மழைக்கு நிலத்தில் ஈரப்பதம் எப்படி உள்ளது என்பதை சுற்றிப்பார்த்து உள்ளார்.
அப்போது, திடீரென அங்கு மக்காச் சோளம் பயிருக்குள் மறைந்திருந்து பயிரை சேதப்படுத்தி கொண்டிருந்த பன்றியை சத்தம் போட்டு விரட்டி உள்ளார். இதனால், பன்றி சீறி வந்து மோகன்ராஜை தாக்கியுள்ளது. கையில் காயமடைந்தவர் அக்கம்பக்கத்து விவசாயிகளை அழைக்கவே, சுப்பா ரெட்டியார் மகன் சண்முகராஜ் (54), சின்னு கோனார் மகன் ராமசாமி (62) ஆகியோர் அங்கு விரைந்து வந்துள்ளனர்.
மூவரும் சேர்ந்து பன்றியை விரட்டியுள்ளனர். ஆனால், பன்றி ராமசாமி மற்றும் சண்முகராஜை கை, கால், உடல் முழுவதும் கடித்து குதறியுள்ளது. தகவல் அறிந்த அயன் கரிசல்குளம் கிராமத்தை சேர்ந்தவர்கள் பன்றி கடித்து காயமடைந்த மூவரையும் மீட்டு சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு அவசர பிரிவில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் பன்றிகள் விவசாய நிலங்களை பெரும் சேதப்படுத்தி வருவதாகவும், பன்றிகளின் அட்டூழியத்தால் விவசாய நிலங்களுக்கு செல்வதற்கும், சாகுபடி செய்வதற்கும் முடியாத நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. பன்றிகளின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட விவசாய மக்களுக்கும், பன்றிகளால் விவசாய நிலங்களில் ஏற்பட்ட சேதத்திற்கும் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர் அப்பகுதி விவசாய பொதுமக்கள்.