விசைப்படகுகள் 1 மாத காலம் ஆகியும் கடலுக்கு செல்லாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில், உடனடியாக தொழிலுக்கு அனுப்ப வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
1000 மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை அலட்சியம் காட்டும் உதவி இயக்குநரின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சியர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லும் விதமாக விசை படகு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அந்தோணிராஜ் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
விசைப்படகு உரிமையாளர்கள் மீனவர் சங்க தலைவர் அந்தோணி ராஜ் அம்மனுவில் கூறியுள்ளதாவது:
வேம்பார் துறைமுகத்தில் அரசின் அனுமதியோடு சுமார் 60 விசைப்படகுகள் நங்கூரமிட்டு 11கோடி ரூபாய் மதிப்பீட்டில் தங்குதளம் அமைக்கப்பட்டு விசைப்படகுகள் தொழில் செய்து வருகின்றனர்.
'கடந்த மாதம் தருவைகுளம் நாட்டுப்படகு மீனவர்களுக்கும்,வேம்பார் விசைப் படகு மீனவர்களுக்கு ஏற்பட்ட தகராறு காரணமாக இருதரப்பினருக்கும் சேதாரம் ஏற்பட்டது. பின்னர் பேச்சுவார்த்தைகள் மூலம் உடன்பாடு ஏற்பட்டு மீண்டும் மீன்வளத்துறையின் உதவி இயக்குனரின் அனுமதியோடு நாங்கள் தொழில் செய்து வந்து கொண்டு இருக்கும் வேளையில், முன்று தினங்களுக்கு பின்னர், உதவி இயக்குநர் அவர்கள் வலை பிரச்சினை உள்ளது. அதை பேசி முடித்து விட்டு கடலுக்கு செல்லுங்கள் என கூறினார்.
நாங்கள் இயக்குனரிடம் நேரில் சென்று விபரம் கேட்கும் போது சிப்பிகுளம்,கீழவைப்பர் கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் வேம்பார் விசைப்படகு மீனவர்கள் மீது 11 லட்சம் மதிப்பிலான வலைகள் சேதம் அடைந்துள்ளது அதை பேசி முடித்து விட்டு தாங்கள் கடலுக்கு செல்லலாம் என கூறினார்.
சுமார் 30 தினங்கள் ஆகியும் இன்று வரை நாங்கள் கடலுக்கு செல்லவில்லை. இதற்கிடையில் சுமார் 10முறை மீன்துறை உதவி இயக்குனரை சந்தித்து பேசியும், எந்த வித பலனும் இல்லை. இறுதியாக கடந்த வியாழக்கிழமை அன்று மீன்துறை அதிகாரிகளிடன் புகார் அளித்தோம்.
பின்னர், 10.02 2021 அன்று காலை மீன்துறை உதவி இயக்குநர் அவர்களின் தலைமையிலும், காவல்துறை துணை கண்காணிப்பாளர் அவர்களின் முன்னிலையிலும், பேச்சு வார்த்தை நடைபெற்றது. அப்பேச்சு வார்த்தையில் இறுதியாக 1,10,000 கொடுக்க முடிவு எடுக்கப்பட்டது.
அதற்கு நாங்கள் சம்மதம் தெரிவித்தோம். ஆனால் சிப்பிகுளம்,வைப்பார் மீனவர்கள் இதற்கு உடன்படவில்லை.
இதனால் இப்பிரச்சினை மீண்டு கொண்டே போகும் சூழ்நிலை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் உள்ளோம்.
1 மாத காலமாக தொழிலுக்கு செல்லாமல் 1000 மீனவ குடும்பங்கள் பசியும், பட்டினியுமாக இருக்கிறோம். எங்களின் குடும்பத்தில் உள்ள சிறு குழந்தைகளுக்கு பால் வாங்க கூட வழி இல்லாத சூழ்நிலையில் தற்போது ஆளாகி உள்ளோம்.
மாவட்ட ஆட்சியர் அவர்கள் உடனடியாக எங்களின் வாழ்வாதாரம் பாதிக்காத அளவில் தொழிலுக்கு அனுப்ப உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம் என அம்மன்னுவில் கூறியிருந்தார்.