• vilasalnews@gmail.com

பாகனை கொன்றதால்.. உணவு சாப்பிட மறுக்கும் திருச்செந்தூர் தெய்வானை யானை!

  • Share on

பாகன் உயிரிழந்ததால் யானை தெய்வானை உணவு எதையும் சாப்பிட மறுப்பதாகவும் இதனால் அதன் உடல்நிலையைக் கண்காணித்து வருவதாகவும் யானையைப் பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.


நேற்றைய ( 18.11.24 ) தினம் யானை கோவில் வளாகத்தின் கொட்டகையில் இருந்த நிலையில், அதற்குப் பழம் தரப் பாகன் உதயகுமார் சென்றுள்ளார். அப்போது அவருடன் உறவினர் சிசுபாலனும் அங்குச் சென்றுள்ளார். அப்போது திடீரென ஆக்ரோஷமாக தெய்வானை யானைப் பாகன் உதயகுமாரையும் சிசுபாலனையும் மிதித்ததாகக் கூறப்படுகிறது. சிசுபாலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த உதயகுமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், அவரும் உயிரிழந்தார்.


பெண் யானைக்கு மதம் பிடிக்காது. அப்படியிருக்கும் போது அமைதியான குணம் கொண்ட தெய்வானை யானை ஏன் இதுபோல தாக்கியது என்று அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சிசுபாலன் யானைக்கு அருகே சென்று செல்பி எடுத்துள்ளாராம். அவர் நீண்ட நேரம் செல்பி எடுத்த நிலையில், ஆக்ரோஷமான யானை சிசுபாலனை முதலில் தாக்கியுள்ளது. சிசுபாலனை காக்க வந்ததால் பாகன் உதயகுமாரையும் யானை தாக்கியதாகத் தகவல் வெளியானது.


இந்தச் சம்பவம் நடந்த கொஞ்ச நேரத்திலேயே யானை மீண்டும் ஆக்ரோஷம் குறைந்து அமைதியாகிவிட்டதாம். அதே நேரம், பாகனுக்கு ஏதோ ஆகிவிட்டது என்பதை உணர்ந்த யானை சாப்பிட மறுத்து வருவதாக அதிகாரிகள் கூறினர்.


இது தொடர்பாக மருத்துவர் கூறுகையில், தெய்வானை 26 வயதான பெண் யானையாகும். இது பொதுவாக ரொம்பவே அமைதியான இயல்பைக் கொண்ட யானையாகும். இதற்கு முன்பு யானை இதுபோல நடந்து கொண்டதே இல்லை. எனவே, என்ன நடந்தது? யானை ஏன் ஆக்ரோஷமாக மாறியது என்பது குறித்து மருத்துவ வல்லுநர் குழு விசாரித்து வருகிறது.


யானை பாதுகாப்பாகவும் நார்மலாகவும் இருக்கிறது. அதேநேரம், அது உணவு எடுத்துக் கொள்ள மறுத்து வருகிறது. பொதுவாக யானை தனது பாகனுடன் நெருக்கமாக இருக்கும். யானை சென்டிசிடிவ்வான விலங்கு. பாகனுக்கு எதாவது நடந்தால் அது யானையையும் பாதிக்கும். இதன் காரணமாகவே யானை உணவு சாப்பிட மறுத்து வருகிறது. இதனால் யானையின் உடல்நிலை மற்றும் நடவடிக்கைகளை கவனித்து வருகிறோம். தேவையான சிகிச்சை தருவோம். தேவைப்பட்டால் மருந்துகள் தரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


வன விலங்குகள் என்ன செய்யும் என்பதைக் கணிக்க முடியாது. ஆனால், இந்த தெய்வானை அமைதியான யானை. திடீரென ஏன் இப்படி மாறியது என்பது குறித்து விசாரிக்கிறோம் என்றார்.

  • Share on

தூத்துக்குடியில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் பலி!

இந்தியாவின் முதல்.. உலகின் இரண்டாவது பெண் பிரதமர் - தூத்துக்குடியில் கொண்டாட்டம்!

  • Share on