தூத்துக்குடியில் பழைய கட்டிட இடிப்பு பணியின் போது, சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி பிரையண்ட் நகரைச் சேர்ந்த ரத்தினசாமி மகன் சின்னத்துரை (47). தொழிலாளியான இவர், லெவிஞ்சிபுரம் 2வது தெருவில் புதிய கட்டிடம் கட்டுவதற்காக அருகில் உள்ள பழைய கட்டிடத்தை இடிக்கும் பணிக்கு நேற்று சென்றாராம். அப்போது, அந்தக் கட்டடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, எதிர்பாராத விதமாக சுவர் இடிந்து சின்னத்துரையின் மீது விழுந்தததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, இடிபாடுக்குள் சிக்கிய அவரை விரைந்து மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்து தென்பாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.