• vilasalnews@gmail.com

திருச்செந்தூர் கோவில் யானை மிதித்து 2 பேர் பலியானதற்கு காரணம் என்ன? தமிழக அரசு ஏன் செய்ய முன்வரவில்லை?

  • Share on

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் இன்று மதியம் சுமார் 3.30 மணியளவில் கோவில் பெண் யானையான தெய்வானைக்கு பழம் கொடுக்க பாகன் உதயகுமார் சென்றுள்ளார். அவருடன் அவரது உறவினர் சிசுபாலன் இருந்துள்ளார். அப்போது திடீரென யானை அவர்களை மிதித்துள்ளது. இதில், சிசுபாலன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 


காயமடைந்த உதயகுமார் உடனடியாக மீட்கப்பட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவரும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. யானை மிதித்ததாக இருவர் உயிரிழந்த சம்பவம் பக்தர்களிடையேயும், திருச்செந்தூர் கோவிலிலும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


இது போன்ற அசம்பாவிதங்களை தவிர்க்க, கோவில்களில் உள்ள மற்றும் பிற வளர்ப்பு யானைகளுக்கு புத்துணர்வு முகாம் நடத்த அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என திருச்செந்துாரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்து, அவை விசாரனையில் உள்ளது குறிப்பிடதக்கது.


இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் விழாக்கள், பூஜைகளுக்காக யானைகள் பராமரிக்கப்படுகின்றது. முதலில் ஆண் யானைகள் வளர்க்கப்பட்டது. அதன் வாழ்வியல் முறையில் மாற்றம் ஏற்பட்டதால் மதம் பிடித்து சில அசம்பாவிதங்கள் நடந்தது. ஆகவே, பெண் யானைகள் பராமரிக்கப்படுகின்றது. இவற்றிற்கு வனப்பகுதியில் 2003 முதல் புத்துணர்வு முகாம் நடத்தப்பட்டது. கொரோனா காலகட்டத்தில் 2021 ல் புத்துணர்வு முகாம் ஒத்திவைக்கப்பட்டது. அதன் பின் நடத்தப்படவில்லை. யானைகள் வனத்தில் கூட்டமாக வாழக்கூடியவை. அவற்றை தனிமைப்படுத்தி காலில் சங்கிலியால் பிணைத்து அறைக்குள் அடைத்து வைப்பதால் மனரீதியாக பாதிக்கப்படுகின்றது. 2018ல் சமயபுரம் மாரியம்மன் கோயில் யானை மசினி பாகனை கொன்றதுடன் 2 பக்தர்களை காயப்படுத்தியது. திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் யானை தெய்வானை 2020ல் பாகனை மிதித்தது. இதை தவிர்க்க புத்துணர்வு முகாம்கள் நடத்தப்படுகிறது. இதில் யானைகளுக்கு சரிவிகித உணவு, உடல் உபாதைகளுக்கு மருத்துவ உதவி கிடைக்கிறது. சக யானைகளை பார்ப்பது, பழகுவதால் மனரீதியான இறுக்கம் குறைகிறது. கோயில்களில் உள்ள மற்றும் பிற வளர்ப்பு யானைகளுக்கு புத்துணர்வு முகாம் நடத்த அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என திருச்செந்துாரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் மதுரை உயிர்நீதிமன்ற கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.


இந்த மனுவானது கடந்த ஆகஸ்டு மாதம் மதுரை உயிர்நீதிமன்ற கிளையில் நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வுக்கு வந்து விசாரிக்கப்பட்டது.


அப்போது தமிழக அரசு தரப்பில் அந்தந்த கோயில்களில் யானைகள் நீராட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. புத்துணர்வு முகாமிற்கு வாகனங்களில் யானைகளை கொண்டு சென்று வருவதில் நடைமுறைச்சிரமங்கள் உள்ளன. இவ்வாறு தெரிவித்தது.


தொடர்ந்து நீதிபதிகள் இவ்விவகாரத்தில் தமிழக அரசின் கொள்கை முடிவு குறித்து அறநிலையத்துறை முதன்மைச் செயலர், கமிஷனர், வனத்துறை முதன்மைச் செயலர் ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். பின்னர் அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, வழக்கானது நிலுவையில் உள்ளது.


இந்த சூழலில் தான் தற்போது திருச்செந்தூரில் கோவில் யானை மிதித்து இருவர் உயிரிழந்த சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே, தமிழக அரசு இது போன்ற அசம்பாவிதங்களை தவிர்க்க, கோவில்களில் உள்ள மற்றும் பிற வளர்ப்பு யானைகளுக்கு உடனடியாக புத்துணர்வு முகாம் நடத்திட வேண்டும் என பொதுமக்கள், உயிரினங்கள் நல ஆர்வலர்கள், பக்தர்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

  • Share on

திருச்செந்தூர் கோவில் யானை மிதித்ததில் பாகன் உள்பட 2 பேர் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளே... உங்களுக்கான குறைகளை தீர்க்கும் இந்த நாளை நோட் பன்னிக்கோங்க!

  • Share on