திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் யானை மிதித்து பாகன் உள்பட இரண்டு பேர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் முருகனின் இரண்டாம் படை விடான முருகன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு 25 வயது மதிக்கத்தக்க தெய்வானை என்ற கோவில் யானை ஒன்று வளர்க்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இன்று மதியம் சுமார் 3.30 மணியளவில் தெய்வானை யானைக்கு பழம் கொடுக்க பாகன் உதயகுமார் சென்றுள்ளார். அவருடன் அவரது உறவினர் சிசுபாலன் இருந்துள்ளார். அப்போது திடீரென யானை அவர்களை மிதித்துள்ளது. இதில் களியக்காவிளை பகுதியை சேர்ந்த சிசுபாலன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
காயமடைந்த உதயகுமார் உடனடியாக மீட்கப்பட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவரும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. யானை மிதித்ததாக இருவர் உயிரிழந்த சம்பவம் திருச்செந்தூர் கோவிலில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.