நெல்லை திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் திரையரங்கை பார்வையிட வந்த இந்து முன்னனி அமைப்பினரை போலீசார் தடுத்து அவர்களை கைது செய்ததைக் கண்டித்து தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் அமரன் திரைப்படம் திரையிடப்பட்டுள்ள அலங்கார் திரையரங்கில் இன்று அதிகாலையில் 3 மணி அளவில் மர்ம நபர்கள் இரண்டு பேர் பெட்ரோல் குண்டு வீசி விட்டு தப்பி சென்றனர். இது தொடர்பாக மேலப்பாளையம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் பாதிக்கப் பட்ட திரையரங்கை பார்வையிட இந்து முன்னணியின் மாநில துணைத்தலைவர் வி.பி ஜெயக்குமார் வருகை தந்தார். போலீசார், திரையரங்கில் விசாரணை நடப்பதாக கூறி இந்து முன்னணியினரை தடுத்து நிறுத்தினர். இதனை கண்டித்து திடீரென இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சட்டம் ஒழுங்கு பிரச்சினைக்கு வழி வகுக்கும் வகையில் செயல்பட்டதாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்து முன்னணியினர் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில், போலீசாரின் இந்த கைது நடவடிக்கையை கண்டித்து தூத்துக்குடி மாநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பாக டுவீபுரம் 5 தெருவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி மாநகர மாவட்ட தலைவர் இசக்கி முத்துக்குமார், மாவட்டச் செயலாளர் சரவணகுமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பலவேசம், கவி சண்முகம், மற்றும் நிர்வாகிகள் சுதாகர், முத்துகிருஷ்ணன், ராஜ், ஆறுமுகம், பழனி ஆண்டி, கோபி, முருக ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.