தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி அரை நிதியாண்டில் ரூ.241.54 கோடி நிகர லாபம் ஈட்டி உள்ளதாக, வங்கி நிர்வாக இயக்குனர் கே.வி.ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியானது தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு, 1921ம் ஆண்டு துவங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வரும் பாரம்பரியம் மிக்க பழமையான தனியார் துறை வங்கியாகும். வங்கியானது தனது வரலாற்றில் தொடர்ந்து 99 வருட காலமாக லாபம் ஈட்டி வருவது குறிப்பிடத்தக்கது. வங்கியானது 509 கிளைகள், 1162 ஏடிஎம் மையங்கள் மற்றும் 12 மண்டல அலுவலகங்கள் ஆகியவற்றை கொண்டுள்ளது.
நாட்டில் உள்ள 16 மாநிலங்கள் மற்றும் 4 யூனியன் பிரதேசங்களில் தனது விரிவாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு ஏறத்தாழ 5 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்றி வருகிறது. 19.11.2020 அன்று தூத்துக்குடியில் நடைபெற்ற இயக்குனர் குழு கூட்டத்தில் 2020 - 2021 அரையாண்டின் நிதிநிலை தணிக்கை முடிவுகள் இறுதி செய்யப்பட்டது. வங்கியின் இயக்குனர்கள் முன்னிலையில் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கே.வி. ராம மூர்த்தி தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையினை வெளியிட்டார்.
2020 - 2021 ஆண்டில் வங்கியின் செயல்பாட்டினை விளக்கும் சிறப்பம்சங்கள்
2020 - 2021ம் நிதியாண்டில் வங்கியானது பல்வேறு குறிப்பிடத்தக்க சாதனைகளை புரிந்துள்ளது. இதற்கு வங்கியின் திட்டமிட்ட நேர்த்தியான கொள்கைகளும், இயக்குனர் குழு தரும் உற்சாகம், உயர் நிர்வாகக் குழுவின் சீரிய திட்டம் மற்றும் அதனை செயல்படுத்தும் அணுகுமுறை, வங்கி ஊழியர்களின் அயராத உழைப்பும் மற்றும் இவற்றிற்கு எல்லாம் மேலாக வாடிக்கையாளர்கள் தொடர்ந்து தரும் பொன்னான ஆதரவு ஆகியவை தான் இச்சாதனைகளை எட்டிட உதவியது என்றால் அது மிகையாகாது.
2020 - 2021ம் நிதியாண்டில் வங்கியானதுத னது மொத்த வணிகத்தில் 9.72% வளர்ச்சி அடைந்து ரூ.66,765.27 கோடியை எட்டியுள்ளது. வைப்புத் தொகை ரூ.37,161.40 கோடி என்ற நிலையை அடைந்துள்ளது. கடன்களை பொறுத்தமட்டில் ரூ.29,603.87 கோடி என்ற நிலையில் உள்ளது நடப்பு மற்றும் சேமிப்புக் கணக்கு தொகை (CASA) 15.96% வளர்ச்சி அடைந்து ரூ.10,121.42 கோடியாக உள்ளது Provision Coverage Ratio (PCR) 86.92% என்ற நிலையில் உள்ளது.
கடன் வழங்கல் துறை
வங்கியானது விவசாயம் குறு, சிறு தொழில் கடன், வியாபாரக் கடன், வீட்டுக் கடன் மற்றும் கல்விக்கடன் துறைகளுக்கு தொடர்ந்து அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. 2020 - 2021 அரை நிதியாண்டில் முன்னூரிமைத் துறைகளுக்கு (Priority Sector) வழங்கப்பட்டுள்ள மொத்த கடன்கள் ரூ.7,442.95 கோடியில் இருந்து ரூ.20,477.05 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் வளர்ச்சி விகிதம் 17.39% ஆகும்.
முன்னுரிமைத் துறைகளுக்கான கடன்கள் பாரத ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ள இலக்கான 40% என்ற இலக்கை விட அதிகமாக 75.64% என்ற விகிதத்தில் உள்ளது 2020 - 2021 விவசாயத் துறைகளுக்கு வழங்கப்பட்ட மொத்த கடன்கள் ரூ.7,490.31 கோடியாக உள்ளது. விவசாய துறைக்கு, ரிசர்வ் வங்கி நிர்ணயித்த அளவு 18% மட்டுமே ஆகும். இத்துறைக்கு வங்கி மொத்த கடன்களில் 27.67% கடன் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
MSME துறைகளுக்கு வழங்கப்பட்ட மொத்த கடன்கள் ரூ.10,241.72 கோடியில் இருந்து ரூ.11,674.62 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் வளர்ச்சி விகிதம் 13.99% ஆக உள்ளது. இலாப மதிப்பு வங்கியின் வைப்புத் தொகை ரூ.37,161.40 கோடி என்ற நிலையை அடைந்துள்ளது (கடந்த ஆண்டு ரூ.34,068.80 கோடி) நடப்பு மற்றும் சேமிப்புக் கணக்கு தொகை (CASA) கடந்த நிதியாண்டோடு ஒப்பிடுகையில் 15.96% வளர்ச்சி அடைந்து ரூ.10,121.42 கோடியாக உள்ளது.
கடன்களை பொறுத்தமட்டில் 10.53% வளர்ச்சி அடைந்து ரூ.29,603.87 கோடி என்ற நிலையில் உள்ளது வட்டி இல்லா வருமானம் (Non Interest Income) ரூ.294.28 கோடியாக உயர்ந்துள்ளது (கடந்த ஆண்டு ரூ.229.27 கோடி) வங்கியின் செயல்பாட்டுச் செலவுகள் (Operating Expenses) ரூ.1,515.62 கோடியாக உயர்ந்துள்ளது (கடந்த ஆண்டு ரூ.1,486.95 கோடி) வங்கியின் செயல்பாட்டு இலாபம் (Operating Profit) ரூ.581.86 கோடியாக உயர்ந்துள்ளது (கடந்த ஆண்டு ரூ.440.07 கோடி) நிகர இலாபம் (Net profit) ரூ.241.54 கோடி என்ற நிலையில் உள்ளது.
நிகர வட்டி வருமானம் (Net Interest Income) ரூ.634.69 கோடியில் இருந்து ரூ.733.59 கோடியாக உயர்ந்துள்ளது. வங்கியின் நிகர மதிப்பானது (Networth) ரூ.3,725.10 கோடியில் இருந்து ரூ.4,223.26 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் வளர்ச்சி விகிதம் 13.37% ஆக உள்ளது. மொத்த கடன்களில் மொத்த வருவாய் ஈட்டா கடன்கள் (Gross NPA) 3.41% ஆகவும், நிகர வருவாய் ஈட்டா கடன்கள் (Net NPA) 1.16% ஆகவும் உள்ளது.
விரிவாக்கம்
புதியதாக 6 ஏடிஎம் மையங்கள் திறக்கப்பட்டுள்ளது, வங்கியின் மொத்த ஏடிஎம் மையங்களின் எண்ணிக்கை 1,162 ஆகும் வாடிக்கையாளர்களின் வசதிக்காக புதிதாக 54 Cash Recycler Machines திறக்கப்படவுள்ளது. 2020 - 2021ம் நிதி ஆண்டிற்கான வணிக திட்டங்கள் புதிதாக 14 "e-lobby" மையங்கள் அமைத்திட திட்டமிடப்பட்டுள்ளது. கருவூலத்தில் Robotic தொழில் நுட்ப உதவியுடன் இயந்திரங்கள் நிறுவப்படவுள்ளது. RuPay Select Card அறிமுகம் செய்யப்பட உள்ளது. TMB WhatsApp Banking அறிமுகம் செய்யப்பட உள்ளது. TMB DigiLobby அறிமுகம் செய்யப்பட உள்ளது. Reach Skyline மூலமாக சமூக வலைத்தளங்களில் விளம்பரப்படுத்தப்பட உள்ளது. New India Assurance Company Limited உடன் General insurance விற்பனைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது
2020 - 2021ம் ஆண்டிற்கான வங்கியின் வணிக இலக்கு
மொத்த வணிக இலக்கு ரூ.72,500 கோடியாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது. மொத்த வைப்புத் தொகை இலக்கு ரூ.40,500 கோடியாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது. மொத்த கடன் வழங்குவதற்கான இலக்கு ரூ.32,000 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நடப்பு மற்றும் சேமிப்புக் கணக்கு தொகையினை (CASA) ரூ.10,800 கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிகர இலாபம் (Net profit) ரூ.480 கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.