தான் அடகு வைத்த 80 லட்சத்திற்கும் மேல் மதிப்புள்ள சுமார் 135 பவுன் தங்க நகையை திருப்பித் தர மறுப்பதாக தூத்துக்குடி ஜார்ஜ் ரோட்டில் உள்ள அன்னை பைனான்ஸ் மீது பாதிக்கப்பட்ட பெண் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு, காந்திநகரில் வசிக்கும் ஜியோ என்பவரது மனைவி ஜெயராணி ( 34 ). இவர் அதே தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு, காந்திநகரில் ஜீவா என்ற பெண்ணிற்கு சொந்தமான அன்னை பைனான்ஸ்ல், கடந்த 3 ஆண்டுகளில் பல்வேறு காலகட்டங்களில் 80 லட்சத்திற்கும் மேல் மதிப்புள்ள சுமார் 135 பவுன் தங்க நகைகளை அடகு வைத்து சுமார் 53 லட்சம் பணம் வாங்கியுள்ளாராம்.
இந்த நிலையில், மேற்படி தங்க நகைக்களுக்கான அசல் மற்றும் வட்டி தொகையை, திருப்ப செலுத்த சென்றபோது நகைகளை திரும்ப தர முடியாது என்று கூறியதோடு, அன்னை பைனான்ஸ் உரிமையாளர் ஜீவா, அவரது கணவர் மெசிங்டன் மற்றும் அவர்களது கூட்டாளி மகேஷ் ஆகியோர் கூட்டாக சேர்ந்து, ஆபாசமான வார்த்தைகளோடு திட்டி எனக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர். மேலும், எனது தாயார் பெயரில் உள்ள சொத்தையும் அடமானம் வைத்து பெற்ற பணத்தையும் மோசடி செய்து, சொத்து பத்திரத்தையும் தர மறுக்கின்றனர்.
எனவே, நான் அடகு வைத்த 135 பவுன் தங்க நகையை திருப்பித் தர மறுத்து கொலை மிரட்டல் விடுக்கும் தூத்துக்குடி ஜார்ஜ் ரோட்டில் உள்ள அன்னை பைனான்ஸ் உரிமையாளர் ஜீவா, அவரது கணவர் மெசிங்டன் மற்றும் மகேஷ் ஆகியோர் மீது உரியநடவடிக்கை மேற்கொண்டு, என்னுடைய நகை எனக்கு திரும்ப கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார் மனுவில் ஜெயராணி தெரிவித்துள்ளார்.