தூத்துக்குடி தாளமுத்து நகர் அருகே நண்பருடன் மது அருந்திய கட்டிட தொழிலாளி மாயமானார் இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தூத்துக்குடி தாளமுத்து நகர் அருகே உள்ள அழகு முத்து நகரைச் சேர்ந்த செந்தில்வேல் குமாரின் மகன் மகாராஜா ( 36 ). கட்டிட தொழிலாளியான இவருக்கு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளன. மேலும் இவர் மீது ஒரு கொலை வழக்கு ஒன்றும் தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பின் பகுதியில் உள்ள குடிசை வீட்டை இடித்துவிட்டு, புதிய வீடு கட்டுவதற்காக அடிக்கல் நாட்டினார். பின்னர் இரவு தனது வீட்டில் மகாராஜாவும் அவரது நண்பரான தாளமுத்து நகரைச் சேர்ந்த மாரியப்பன் என்பவருடன் மது அருந்தி உள்ளார்.
பின்னர் நேற்று காலை மகாராஜாவின் மனைவி வள்ளிநாயகி வீட்டுக்கு வந்து பார்த்தபோது மகாராஜனையும் அவரது நண்பரையும் காணவில்லை. வீட்டில் ஆங்காங்கே இரத்தக் கரைகள் இருந்துள்ளன. உடனடியாக தனது கணவரின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த தாளமுத்து நகர் போலீஸர் மாயமான மகாராஜா மற்றும் அவர நண்பர் குறித்து விசாரித்து வருகின்றனர்.