தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட தூதுக்குடி - பாளையங்கோட்டை சாலை மில்லர்புரம் வஉசி கல்லூரியின் முன்புறம் அருகே உள்ள பகுதியில், நமக்கு நாமே திட்டம் 2023 - 2024 கீழ் ரூ 56 லட்சம் மதிப்பீட்டில் பெண்களுக்கென பிரத்யேக “மகளிர் பூங்கா” என்னும் பிங்க் பூங்கா திறக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
பெண்களுக்கான இந்த பிரத்யேக பூங்காவை அக்டோபர் 25 ஆம் தேதி அன்று திறந்து வைத்த தூத்துக்குடியின் எம்.பியான கனிமொழி, பெண்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், இங்கு நிபுணர்களின் திறன் அடிப்படையிலான பயிற்சி இங்கு வழங்கப்படுவது, பெண்கள் சொந்தமாக தொழில் தொடங்க வழி செய்யும் மற்றும் பெண்கள் புதிய திறன்கள் கற்றுக்கொள்ளவும் அவர்களின் பொருளாதாரத்தை வலுவூட்டவும் உதவும் எனவும் அவர் கூறினார்.
பெண்களுக்கான இந்த பூங்கா காலை 6 - 9 மணி மற்றும் மாலை 4 - 9 வரை செயல்படுகிறது. எந்த முன்பதிவுமின்றி எப்போது வேண்டுமானாலும் எந்த வயதைச் சார்ந்த பெண்களும் எளிதில் பூங்காவை பயன்படுத்தி பயன்பெறும் வகையில் செயல்பட்டு வருகிறது.
இந்த பூங்காவில் யோகா பயிற்சிக் கூடம், இறகுப் பந்து மைதானம், சிறப்பு அம்சமாகச் சூரிய ஒளியில் இயங்கக்கூடிய குளிர்சாதன வசதியுள்ள உடற்பயிற்சிக் கூடம், டென்னிஸ் மைதானம், ரோப் பிரிட்ஜ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது.
தினந்தோறும் காலை 6 முதல் 7 மணி வரை யோகா பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது மற்றும் மாலை 5 முதல் 6 மணி வரை ஜூம்பா நடனப்பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
எம்ராய்டிங், ஆரி ஒர்க், சிறுதானிய உணவு வகைகள் தயாரிப்பு, நகை தயாரிப்பு, ஓவியப் பயிற்சி, விளையாட்டுப் பொருட்கள் தயாரிப்பு, அழகு கலைப் பயிற்சி, கைவினைப் பொருட்கள் தயாரிப்பு போன்ற பயிற்சிகளை வருங்காலத்தில் இந்த பூங்காவில் செயல்படுத்த உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
உடற்பயிற்சி, யோகா பயிற்சி உள்ளிட்டவை செய்து மனதையும், உடலையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள பெரும் உதவிகரமாக இருக்கும் இது போன்ற பெண்களுக்கான பிரத்யேக பூங்காவை நம்ம தூத்துக்குடி பெண்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என பெண்ணியவாதிகளும், சமூக சிந்தனையாளர்களும் தெரிவிக்கின்றனர்.