
தூத்துக்குடி மாநகரில் கடற்கரை, திரையரங்குகள் தவிர பெரிய அளவில் பொழுது போக்கு இடங்கள் இல்லாமல் இருப்பது தூத்துக்குடி மக்களுக்கு கொஞ்சம் கவலை தான். இருப்பினும், சீரமைக்கப்பட்ட முத்துநகர் கடற்கரை, ஆங்காங்கே புதிய பூங்காக்கள் தான் பொழுபோக்கிற்கு இடம் தேடும் தூத்துக்குடி மக்களுக்கான சற்று ஆறுதலாக அமைகிறது.
இருப்பினும், தூத்துக்குடி மக்களை அவ்வப்போது மனமகிழ்வுடன் குதுகலமாக வைக்க மாநகராட்சியும், ஆளும் அரசும் நடவடிக்கை எடுக்க மறக்கவில்லை என்பதற்கு சாட்சி தான் நெய்தல் திருவிழாவும், ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியின் அடையாளங்களும் ஆகும்.
இருப்பினும், வார விடுமுறை, பண்டிகை கால விடுமுறை, பள்ளி தேர்வு விடுமுறை போன்ற காலங்களில் குடும்பங்களுடன் வெளியே சென்று மகிழ்ச்சியாக பொழுதை கழிக்க நம்ம தூத்துக்குடியில் ஏதாவது இடம் இருக்கிறதா என்று தேடிக்கொண்டிருக்கும் தூத்துக்குடி மக்களுக்கு, தூத்துக்குடி மாநகராட்சி ஒரு நல்ல செய்தியை கொண்டு வந்திருப்பது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, தூத்துக்குடி துறைமுகமும் மாநகராட்சியும் இணைந்து துறைமுகம் கடற்கரை பகுதியில் பல்வேறு பொழுது போக்கு அம்சங்களுடன், புதிய பூங்கா அமைக்கும் திட்டத்தின் முதற்கட்ட பணியாக புதிய பூங்காவிற்கான இடத்தினை மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் மதுபாலன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின் போது திமுக பகுதி செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் குமார், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.