புதியம்புத்தூர் பகுதியில் ஜவுளி விற்பனை வளாகம் அமைப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடனான துணிநூல் இயக்குநர் லலிதா ஆலோசனை நடத்தினார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் இன்று (08.11.2024) துணிநூல் துறை சார்பில், புதியம்புத்தூர் பகுதியில் ஜவுளி விற்பனை வளாகம் அமைப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் முன்னிலையில், துணிநூல் இயக்குநர் லலிதா தலைமையில் நடைபெற்றது.
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர், தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூர் பகுதியில் ஜவுளி விற்பனை வளாகம் அமைப்பது தொடர்பாக கோரிக்கை விடுத்துள்ளார். அதன்படி இத்திட்டத்தினை செயல்படுத்துவது தொடர்பாக இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது என கூட்டத்தில் துணிநூல் இயக்குநர் இரா.லலிதா தெரிவித்தார்.
மேலும், அரசு நிலங்கள் தவிர்த்து, தனியாரிடமிருந்து நிலத்தினை கொள்முதல் செய்து ஜவுளி விற்பனை வளாகம் அமைப்பதற்கு சாத்தியக் கூறுகள் குறித்து சங்க நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார்.
ஜவுளி விற்பனை வளாகம் அமைப்பதற்காக புதியம்புத்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளான ஜம்புலிங்காபுரம், சாமிநத்தம், ஆகிய பகுதிகளில் அரசு காலி நிலங்கள், மேய்ச்சல் புறம்போக்கு நிலங்கள் மற்றும் இந்துசமய அறநிலையத் துறைக்கு சொந்தமான காலியிடங்கள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் கேட்டறிந்தார். மேலும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ஜவுளி விற்பனை வளாகக் கட்டிடம் அமைக்க வாய்ப்புள்ளதா என்பது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.
பின்னர், புதியம்புத்தூரில் உள்ள ஆயத்த ஆடை உற்பத்தி மற்றும் விற்பனையாளர்கள் சங்கங்கள் உற்பத்தி செய்து வரும் ஆயத்த ஆடைகளை பார்வையிட்டனர், ஜவுளி இரகங்களின் கொள்முதல், உற்பத்தி செய்யப்படும் ஜவுளி இரகங்களின் வடிவமைப்பு, தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் கூலி விபரங்கள் மற்றும் விற்பனை நிலவரம் குறித்தும் கேட்டறிந்தனர், அப்பகுதியில் ஜவுளி விற்பனை வளாகம் அமைப்பதற்காக இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான காலியிடம் மற்றும் அரசுக்கு சொந்தமான மேய்ச்சல் புறம்போக்கு நிலங்களை பார்வையிட்டனர்.
இக்கூட்டத்தில், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியக் குழுயர் எல்.ரமேஷ், மதுரை மண்டல துணிநூல் துறை துணை இயக்குநர் திருவாசகர், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ஸ்வர்ணலதா, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) மல்லிகா, அரசு அலுவலர்கள் மற்றும் ஆயத்த ஆடை உற்பத்தி மற்றும் விற்பனையாளர்கள் சங்கப் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.