தூத்துக்குடியில் மாநகராட்சி வாகன காப்பகத்தில் ரசீது மிஷினை கத்தியால் வெட்டி சேதப்படுத்தி, ரூபாய் 2100 பணம் பறித்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்தவர் ஸ்ரீதரன் ( 24 ). இவர் தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தின் ( பழைய பேருந்து நிலையம்) முதல் மாடியில் உள்ள மாநகராட்சி வாகன காப்பகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இவர் பணியில் இருந்த போது, அங்கு வந்த காதர் மீரான் நகரைச் சேர்ந்த நாகராஜ் மகன் சதீஷ்குமார் ( 20 ), மத்திய அரசு ஊழியர் குடியிருப்பைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் சுதாகர் ( 23 ) ஆகியோர் ஸ்ரீதரிடம் தண்ணீர் கேட்டுள்ளனர். இது தொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த இருவரும் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரசீது வழங்கும் டிஜிட்டல் மிஷினை சேதப்படுத்தினர். மேலும் மேஜையின் டிராயரில் இருந்த ரூபாய் 2,100 பணத்தையும் எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர். இது குறித்த புகாரின் பேரில் மத்திய பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து, சதீஷ்குமார், சுதாகர் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.