• vilasalnews@gmail.com

ஆராரோ ஆரிரரோ.. ஆரடிச்சு நீயழுதாய் கண்மணியே கண்ணுறங்கு : அழுத குழந்தையை அமைதி படுத்திய அமைச்சர் கீதாஜீவன்

  • Share on

தூத்துக்குடியிலிருந்து நேற்று காலை சென்னை புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் குழந்தை ஒன்றின் அழுகையை நிறுத்த அமைச்சர் கீதா ஜீவன் தாலாட்டு பாடியது அந்த குழந்தையின் அம்மாவை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.


தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்திலிருந்து நேற்று காலை 11 மணிக்கு சென்னை  புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் ஒரு இளம் தம்பதி தங்களது கைக் குழந்தையுடன் பயணம் செய்தனர். இரண்டு வயது மதிக்கத்தக்க அந்தக் குழந்தை விமானம் புறப்படும் வரை அமைதியாக இருந்தது. ஆனால், ரன் வேயில் ஓடி விமானம் மேலெழும்பத் தொடங்கியதும் குழந்தை அழத் தொடங்கியுள்ளது.


விமானத்தில் பயணிக்கும் குழந்தைகளில் சிலர் விமானம் டேக் ஆப் ஆகத் தொடங்கும் பொழுது அழுவது வழக்கமானதுதான் என்பதால் அந்தக் குழந்தையின் தாய் தந்தை இருவரும் குழந்தையைத் தூக்கி அழுகையை நிறுத்த முயற்சி செய்தனர். ஆனால், நிமிடங்கள் பல கடந்தும் குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததால் பயணிகள் பலரும் குழந்தையின் அழுகையை நிறுத்த முயற்சி செய்தனர். ஆனால் குழந்தை அழுகையை நிறுத்துவதாக இல்லை.


இந்த நிலையில், அந்தத் தம்பதி அமர்ந்திருந்த சீட்டுக்கு இரண்டு சீட்  பின்னால் அமர்ந்திருந்த அமைச்சர் கீதா ஜீவன் எழுந்து வந்து குழந்தையின் அப்பாவை எழுந்திருக்கச் சொல்லி விட்டு குழந்தையின் தாயிடமிருந்து குழந்தையை வாங்கித் தன் மடியில் வைத்து தாலாட்டு பாடத் தொடங்கியுள்ளார்.


அதுவரை கேட்காத தாலாட்டுச் சத்தத்தைக் கேட்டதாலோ என்னவோ அடுத்த சில நிமிடங்களிலேயே அழுகையை நிறுத்தி விட்டது குழந்தை. இன்னொரு ஆச்சரியம் அடுத்த சில நிமிடங்களில் அமைச்சர் கீதா ஜீவனின் மடியிலேயே குழந்தை தூங்கவும் செய்து விட்டதாம். பிறகு குழந்தையை தாயிடம் ஒப்படைத்த அமைச்சர் கீதா ஜீவன் தன் சீட்டுக்குத் திரும்பினாராம். சமூக நலத் துறை அமைச்சர் நடுவானில் குழந்தையின் அழுகையை நிறுத்தத் தாலாட்டு பாடியதைக் கண்டு அந்த விமானத்தில் பயணம் செய்த அனைவருக்கும் மகிழ்ச்சியை உருவாக்கியதாகச் சொல்கிறார்கள்.

  • Share on

அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவர் பணிக்கு நவ.,23க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

தூத்துக்குடி மாநகராட்சி வாகன காப்பகத்தில் ஊழியரை தாக்கி பணம் பறிப்பு : இருவர் கைது!

  • Share on