தூத்துக்குடி மாவட்டத்திற்கு வரும் 17ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வருகிறார். 4 தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேச இருக்கிறார்.
தூத்துக்குடி மாவட்டத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு வருகை தந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தூத்துக்குடி வடக்கு மாவட்டமான கோவில்பட்டி, விளாத்திகுளம், தொகுதிகளில் மட்டும் பிரச்சார பயணம் இருந்தது. அவசர பணி காரணமாக முதல்வர் சென்னை சென்றுவிட்டார்.
தெற்கு மாவட்டத்தில் மாவட்ட செயலாளர் சண்முகநாதன் தலைமையில் மிகப்பெரிய அளவில் முதல்வருக்கு வரவேற்பு ஏற்பாடு செய்திருந்தார்கள். பிரம்மாண்டமான டிஜிட்டல் பேனர்கள், வரவேற்பு வளைவுகள், பல ஆயிரக்கணக்கான கொடிகள் என சண்முகநாதன் அமர்க்களப்படுத்தி இருந்தார். ஆனால் முதல்வர் வரமுடியாமல் போய்விட்டது.
இந்நிலையில் விடுபட்ட தெற்கு மாவட்ட தொகுதிகள் மற்றும் வடக்கு மாவட்டத்தில் ஓட்டப்பிடாரம் தொகுதியில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் பழனிசாமி வரும் 17ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் வருகிறார்.
முதல்வர் பங்கேற்க உள்ள 4 தொகுதிகளிலும் முதல்வருக்கு, மிகப்பெரிய அளவில், தேர்தல் நேரத்தில் மீண்டும் இம்மாவட்டத்தை அதிமுகவின் கோட்டை என்பதை முதல்வருக்கு நிரூபித்துக் காட்டும் வகையில் பிரம்மாண்ட வரவேற்பு ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர் அமைச்சர் கடம்பூர் செ.ராஜு சண்முகநாதன் எம்எல்ஏ ஆகியோர் செய்ய தொடங்கிவிட்டதாக அதிமுக வட்டாரங்களில் கூறப்படுகிறது.
வரும் 17ம் தேதி காலை 10.15 மணிக்கு தூத்துக்குடிக்கு விமானம் மூலம் வருகிறார். விமான நிலையத்தில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் காலை 11 மணிக்கு ஸ்ரீவைகுண்டம் தொகுதியிலும், 12 மணிக்கு திருச்செந்தூர் தொகுதியில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் பேசுகிறார்.
மதியம் 1 மணிக்கு திருச்செந்தூர் தொகுதியிலும், ஆறுமுகநேரியிலும் முதல்வர் பிரச்சாரம் செய்கிறார். மதியம் 2 மணிக்கு தனியார் தொழிற்சாலை விடுதியில் முதல்வரும் மதிய உணவு சாப்பிடுகிறார்.
மாலை 5 மணிக்கு மீண்டும் பிரச்சாரத்தை முதல்வர் பழனிசாமி துவக்குகிறார். மாலை 5 மணிக்கு ஓட்டப்பிடாரம் தொகுதி புதியம்புத்தூர் தொகுதியில் மாலை 6.30 மணிக்கு மாப்பிள்ளையூரணி பகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்.
இறுதியில் மாலை 7 மணிக்கு தூத்துக்குடி தொகுதியில் பிரம்மாண்ட தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதல்வர் பேசுகிறார். முதல்வர் வருகையையொட்டி தடபுடல் ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர்கள் ஆலோசனையின் பேரில் தங்கள் பகுதியில் அதிமுகவினர் செய்து வருகின்றனர்.