முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடும், கடற்கரை ஓரத் தலமும் ஆனது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில். இங்கு ஆண்டுதோறும் நடக்கும் விழாக்களில் கந்தசஷ்டித் திருவிழா முக்கியமானது.
அதன்படி, கந்த சஷ்டி திருவிழா முதல் நாள் யாக சாலை பூஜையுடன் இன்று தொடங்கியது. மதியம் 12 மணிக்கு யாக பூஜையில் தீபாராதனை, 12.45 மணிக்கு வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு பாடல்களுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி சுவாமி ஜெயந்தி நாதர் சண்முக விலாசம் மண்டபம் வந்து அங்கு தீபாராதனை நடக்கிறது.
மாலை 3:30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், 4 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சஷ்டி மண்டபத்தில் சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்று தீபாராதனைக்கு பின் சுவாமி ஜெயந்தி நாதர் கிரி வீதி உலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது. வரும் 7-ஆம் தேதியன்று சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. இந்த நிலையில், இன்று கடலில் புனித நீராடி, மாலை அணிந்து பக்தர்கள் சஷ்டி விரதத்தை தொடங்கினர்.