சூரசம்ஹாரத்தை முன்னிட்டு திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகம் முழுவதும் மட்டுமின்றி, அண்டை மாநிலமான பெங்களூருவில் இருந்தும் பொதுமக்கள் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு திருச்செந்தூருக்கு சென்று தரிசனம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதன்படி வரும் நவ.7ஆம் தேதி சூரசம்ஹாரம் நடைபெறவிருப்பதால் திருச்செந்தூருக்கு அதிகளவில் மக்கள் பயணிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனடிப்படையில் வரும் 6-ஆம் தேதி சென்னை, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து திருச்செந்தூருக்கும், நவ.7-ஆம் தேதி திருச்செந்தூரில் இருந்து சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இப்பேருந்துகளை www.tnstc.in என்ற இணையதளம், tnstc செயலி வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம். சிறப்பு பேருந்து இயக்கத்தைக் கண்காணிக்க பேருந்து நிலையங்களில் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.