• vilasalnews@gmail.com

எட்டயபுரம் அருகே வாலிபர் எரித்துக் கொலை : தந்தை, சகோதரர் உள்பட 4 பேர் கைது!

  • Share on

எட்டயபுரம் அருகே குடிப்பழக்கத்தை கைவிடாததால் வாலிபரை எரித்துக்கொன்றதாக அவரது தந்தை, சகோதரர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். 


இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : 


தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே குமாரகிரி காட்டுப்பகுதியில் கடந்த 29ஆம் தேதி உடல் கருகிய நிலையில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். 


அதில் குமாரகிரி அருகில் உள்ள பெட்ரோல் பங்க்கில் காரில் சென்ற சிலர் கேனில் பெட்ரோல் வாங்கியது தெரிய வந்தது. தொடர்ந்து, கார் பதிவெண் மூலம் போலீசார் துப்பு துலக்கினர். காரில் வந்தவர்களிடம் விசாரித்தனர்.


அந்த விசாரணையில், காரில் வந்தவர்கள் தூத்துக்குடி தாளமுத்துநகர் ராமதாஸ் நகரைச் சேர்ந்த மகேஷ் (47), அவருடைய மகன் அரவிந்த் (24), அவர்களது உறவினரான மணக்கரையை சேர்ந்த சிவா மகன் பாலகிருஷ்ணன் (37) என்பது தெரிய வந்தது. மேலும், மகேஷ் தனது மகன் செல்வகுமாரை (22) கொலை செய்து, உடலை தீ வைத்து எரித்த அதிர்ச்சியூட்டும் தகவலும் வெளியானது.


மகேஷ் க்கு சொந்த ஊர், கோவில்பட்டி அருகே உள்ள கிழவிபட்டி ஆகும். கூலி தொழிலாளியான இவருக்கு மனைவி மற்றும் 3 மகன்கள் உள்ளனர். மகேஷ் வேலை நிமித்தமாக தூத்துக்குடி ராமதாஸ் நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய 2 வது மகன் செல்வகுமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. அவரிடம் மதுகுடிக்கும் பழக்கத்தை கைவிடுமாறு குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். ஆனாலும், அவர் மதுகுடிக்கும் பழக்கத்தை கைவிடவில்லை.


இதையடுத்து செல்வகுமாரை மதுரையில் உள்ள போதை மீட்பு மறுவாழ்வு மையத்தில் சேர்க்க முடிவு செய்தனர். அதனையடுத்து, மகேஷ் தனது மூத்த மகன் அரவிந்த், உறவினர் பாலகிருஷ்ணன் ஆகியோருடன் செல்வகுமாரை அழைத்துக் கொண்டு காரில் மதுரைக்கு புறப்பட்டு சென்றனர்.


அப்போது, செல்லும் வழியில் செல்வகுமார் மதுரைக்கு வர மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளாராம். இதையடுத்து, அவரது கழுத்தை தந்தை மகேஷ் உள்ளிட்டவர்கள் துண்டால் நெரித்ததாக கூறப்படுகிறது. இதில் செல்வகுமார் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடலை சொந்த ஊரான கிழவிபட்டிக்கு கொண்டு செல்ல முடிவு செய்தனர். 


பின்னர், கிழவிபட்டிக்கு செல்லும் வழியில் குமாரகிரி காட்டுப்பகுதியில் யாருக்கும் தெரியாமல் அவரது உடலை எரிக்க திட்டமிட்டனர். அதன்படி அங்குள்ள பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் வாங்கி சென்று, குமாரகிரி காட்டுப்பகுதியில் வைத்து உடலை எரித்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. 


இதுதொடர்பாக தந்தை மகேஷ், அவருடைய மகன் அரவிந்த், உறவினர் பாலகிருஷ்ணன் மற்றும் 18 வயது சிறுவன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

  • Share on

பங்காரு அம்மா மக்கள் நலத்திட்டம் சார்பில் ஆதரவற்றோர் இல்லங்களில் சமுதாயப்பணி!

தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் வீரர்கள் தேர்வு!

  • Share on