தூத்துக்குடியில் காருக்கு வழி விட மறுத்த மத போதகர் ஜெகன் என்பவரை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ் பி வேலுமணி, கடம்பூர் ராஜு மற்றும் அதிமுக தொண்டர்கள் தாக்கியதாக புகார் தெரிவித்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், பண்டார விலையை சேர்ந்த நடேசன் என்பவரது மகன் ஜெகன் இவர் ஆறுமுகநேரி மடத்துவிளை சிஎஸ்ஐ ஆலய போதகராக பணியாற்றி வருகிறார். இவர் இன்று ஆறுமுகநேரியில் இருந்து தூத்துக்குடியில் உள்ள சிஎஸ்ஐ தலைமை அலுவலகத்திற்கு தனது காரில் வந்துள்ளார்.
அப்போது அவருக்கு பின்னால் திருச்செந்தூரில் சாமி கும்பிட்டு விட்டு தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டியில் நடைபெற இருந்த அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மற்றும் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு மற்றும் அதிமுகவினர் இவரது காருக்கு முன்னே செல்ல வழி கேட்டு ஒலி எழுப்பி உள்ளனர். ஆனால் முன்னாள் சென்று கொண்டிருந்த போதகர் ஜெகன் வழிவிடாமல் சென்றாராம்.
இதனால் ஆத்திரமடைந்த அதிமுகவினர் அவரது காரை விரட்டி வந்து தூத்துக்குடி புதிய துறைமுகம் திருச்செந்தூர் ரோடு ரவுண்டானா அருகே வழிமறித்து நிறுத்தி அவரை கையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த ஜெகன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் விசாரணை நடத்தி வருகிறார். சம்பவ இடத்தை தூத்துக்குடி டவுன் ஏஎஸ்பி மதன் பார்வையிட்டார்.
இதற்கிடையே தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாஸ்டர் ஜெகன் செய்தியாளரிடம் கூறும்போது:-
ஆறுமுகநேரியில் இருந்து நான் காரில் வரும்போது பின்னால் அதிமுகவினர் வழி கேட்டு ஹாரன் அடித்தார்கள். எதிரே வாகனங்கள் வரிசையாக வந்து கொண்டிருந்ததால் என்னால் வழிவிட முடியவில்லை. ஆனால் திருச்செந்தூர ரோடு ரவுண்டானா அருகே வரும்போது அவர்களது காருக்கு வழி விட்டேன். ஆனால் அவர்கள் எனது காரை சுற்றி வளைத்து என்னை தாக்கினார்கள் என்று கூறினார். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாஸ்டர் ஜெகனை அமைச்சர் கீதாஜீவன், கிறிஸ்தவ மதபோதகர்கள் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.