• vilasalnews@gmail.com

குலசை தசரா கொடியேற்றத்திற்கு சென்று திரும்பிய போது விபத்து - 3 பேர் உயிரிழப்பு!

  • Share on

குலசேகரன்பட்டினம் அருகே ஆட்டோ மீது லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்த 3 பக்தர்கள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். 


தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் உலக புகழ்பெற்ற தசரா திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வாகனங்கள் மூலம் குலசேகரன்பட்டினம் வந்து மாலை அணிந்தனர். இதில், தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தல், செக்காரக்குடி பகுதியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட தசரா பக்தர்கள் குலசேகரன்பட்டினத்தில் சுவாமி தரிசனம் முடித்துவிட்டு மாலை அணிந்து கொண்டனர். 


பின்னர், அங்கிருந்து அவர்கள் நேற்று  சரக்கு ஆட்டோவில் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது, உடன்குடி அனல்மின் நிலைய பகுதியில் வரும்போது முன்னால் சென்ற வாகனங்களை டிரைவர் முந்தி செல்ல முயன்றுள்ளார். அப்போது எதிரே ஆலங்குளத்தில் இருந்து குலசேகரன்பட்டினம் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக பக்தர்கள் வந்த லாரி, ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதியது.


இந்த விபத்தில் ஆட்டோ டிரைவரான செக்காரக்குடியை சேர்ந்த சுடலைவீரன், பெருமாள் மகன் பெரும்படையான், ஆதிமூலப் பெருமாள் மகன் வடிவேல், சுப்பிரமணி, மாயாண்டி, மற்றொரு சுப்பிரமணி, சுடலைமணி, கிருஷ்ண பெருமாள், மற்றொரு சுடலைமணி, அய்யம்பெருமாள், அருணாச்சலம் ஆகிய 11 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் திருச்செந்தூர் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். 


அதில், மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பெருமாள் மகன் பெரும்படையான் (20), ராமலிங்கம் மகன் கிருஷ்ண பெருமாள் (25) ஆகியோர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். மேலும், தீவிர சிகிச்சை பிரிவில் டாக்டர்களின் கண்காணிப்பில் இருந்து வந்த ஆதிமூலப் பெருமாள் மகன் வடிவேல் (17) சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலையில் பரிதாபமாக உயிரிழந்தார். 


இந்த விபத்து தொடர்பாக குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து, லாரியை ஓட்டி வந்த டிரைவரான ஆலங்குளம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மாரியப்பன்(38) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். குலசேகரன்பட்டினம் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் 3பேர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

  • Share on

தூத்துக்குடியில் டீ கடைக்காரர் கொலை வழக்கில் ஒருவர் கைது!

தூத்துக்குடியில் புதிய துறைமுகம் முன்பு நிறுத்தப்பட்ட பைக்கை திருடிய வாலிபர் கைது!

  • Share on