தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி, நகர உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் மதன் மேற்பார்வையில், தென்பாகம் காவல் ஆய்வாளர் முருகன், உதவி ஆய்வாளர் மாணிக்க ராஜ் மற்றும் நகர உட்கோட்ட தனிப்படை போலீஸார், மாநகரில் அண்மையில் நடைபெற்ற திருட்டு வழக்குகள் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்தநிலையில், இந்ததனிப்படை போலீஸார் மில்லர்புரம் பகுதியில் இன்று ( 3.10.24 ) வியாழக்கிழமை அதிகாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அப்பகுதியில் உள்ள முருகேசன் என்பவரது மகன் சிவபிரகாஷ் நாராயணன் என்பவர் வீட்டில் இருந்து சிசிடிவி காட்சிகள் பதிவாகும் டி.வி.ஆர்.ஐ யை திருடிச்சென்ற ஒருவரை, மேற்படி தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணை மேற்கொண்டதில், அந்த நபர், தூத்துக்குடி ரஹமத்துல்லாபுரத்தை சேர்ந்த முகமது யூசுப் மகன் மொய்தீன் (36) என்பதும், இவர் மீது சென்னை, திருவள்ளூர், சேலம், வேலூர், கோவில்பட்டி உள்ளிட்ட காவல்நிலையங்களில் சுமார் 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது தெரியவந்தது.
மேலும், செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டூவிபுரம் 5 வது தெருவில் இரண்டு வீடுகள், ஜூலை மாதம் 24 ஆம் தேதி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மில்லர்புரம் பள்ளிவாசல் தெருவில் ஒரு வீட்டிலும், ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி சிதம்பரம் நகர் 3வது தெருவில் உள்ள ஒரு வீட்டிலும் இவர் திருடியது தெரியவந்தது.
இதனையடுத்து, பல்வேறு வீடுகளில் திருடிய சுமார் 12 பவுன் தங்க நகைகள், சுமார் 465 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் கைக்கடிகாரங்கள், செல்போன் உள்ளிட்டவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.