தூத்துக்குடி மாநகரில் உள்ள மாற்றுத் திறனாளிகள் தங்களது குறைகள் தொடர்பான மனுக்களை, அவர்களது வீட்டுக்கே சென்று மாநகராட்சி அலுவலர்கள் மூலம் பெறப்பட்டு, அதை தீர்க்கும் நடைமுறை கொண்டுவரப்பட உள்ளதாக, வடக்கு மண்டல அலுவலகத்தில் இன்று (அக்.3) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் இன்று (அக்.3) மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். பின்னர் அவர் பேசும்போது, "கடந்த அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளாக தூத்துக்குடியில் எந்த சாலைகளும் போடவில்லை. கடந்த 3 ஆண்டு திமுக ஆட்சியில் 2500 சாலைகள் போடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ளம் நமக்கு ஒரு பாடம். காட்டாற்று வெள்ளம் கடலில் கலக்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், காட்டாறு வெள்ளம் வரக்கூடிய புதுக்கோட்டை, கோரம்பள்ளம் 24 மதகு கண்மாய், உப்பாற்று ஓடை உள்ளிட்ட இடங்களில் மழைநீர் வெள்ளம் எவ்வளவு வருகிறது என்பதை கணக்கிட கருவிகள் 4 இடங்களில் பொருத்தப்பட்டுள்ளது. இவை, தூத்துக்குடி மழைவெள்ளத்தில் பாதிக்காதவாறு முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள உதவியாக இருக்கும்.
தூத்துக்குடி மாநகரில் உள்ள மாற்றுத் திறனாளிகள் தங்களது குறைகள் தொடர்பான மனுக்களை, அவர்களது வீட்டுக்கே சென்று மாநகராட்சி அலுவலர்கள் மூலம் பெறப்பட்டு, அதை தீர்க்கும் நடைமுறை கொண்டுவரப்பட உள்ளதாக, தூத்துக்குடியில் நடைபெறும் புத்தக கண்காட்சினை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்". என்றார்.
இக்கூட்டத்தில் ஆணையர் மதுபாலன், துணை பொறியாளர் சரவணன், துணை மேயர் ஜெனிட்டா, மண்டல தலைவர் நிர்மல், மாமன்ற உறுப்பினர்கள் ரெங்கசாமி, ஜெயசீலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.