திருச்செந்தூா் முருகன் கோயில் சூரசம்ஹார விழாவில் பங்கேற்க அனுமதி யில்லாததால் விடுதிகளில் தங்கியிருந்த பக்தா்களை வெளியேற்றும் பணியில் காவல்துறையினா் ஈடுபட்டனா்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 15-ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், மதியம் சாயரட்சை தீபாராதனை நடைபெறுகிறது.
மாலை 4.30 மணி அளவில் சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருளுகிறார். தொடர்ந்து கடற்கரை நுழைவாயில் பகுதியில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. 7-ம் திருநாளான நாளை (சனிக்கிழமை) இரவில் சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. கரோனா பொது முடக்கத்தால் நவ. 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் சூரசம்ஹார விழா மற்றும் திருக்கல்யாண நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும், திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்திடவும் பக்தா்களுக்கு அனுமதியில்லை.
இதனால் திருச்செந்தூா் விடுதிகள் மற்றும் மடங்களில் தங்கியிருந்த பக்தா்கள் நேற்று மாலைக்குள் வெளியேறுமாறு காவல்துறை அறிவுறுத்தி வந்தது.இதையடுத்து, விடுதிகளிலிருந்து பக்தா்கள் வெளியேறுவதை காவல்துறையினா் கண்காணித்தும், வெளியேற்றும் பணியிலும் ஈடுபட்டனா். விழாவையொட்டி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் மேற்பார்வையில், திருச்செந்தூர் டிஎஸ்பி ஹர்ஷ் சிங் தலைமையில் பாதுகாப்புக்காக சுமார் 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
ஆண்டுதோறும் பல லட்சம் பக்தர்கள் மத்தியில் நடைபெறும் சூரசம்ஹாரம் தற்போது பக்தர்கள் பங்கேற்பின்றி எளிமையாக நடைபெறுகிறது. விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் யு-டியூப் இணையதளத்திலும், உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் (பொறுப்பு) கல்யாணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.