தூத்துக்குடியில் நாட்டுப்படகில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் நடுக்கடலில் தவறி விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி திரேஸ்புரம், மாதவன் நாயர் காலனியைச் சேர்ந்தவர் அந்தோணி மகன் பெனந்தோஸ் (64). இவர், நேற்று காலை 4 மணி அளவில் சக மீனவர்கள் நான்கு பேருடன் திரேஸ்புரம் கடற்கரையில் இருந்து நாட்டுப்படகில் தங்கு கடல் முறையில் மீன்பிடிக்க சென்றுள்ளார்.
இந்த நிலையில், இன்று மதியம் கரையில் இருந்து சுமார் 15 மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்ருந்தபோது வலையில் சிக்கிய பெரிய மீனை இழுக்க முயன்றபோது பெனந்தோஸ் தவறி கடலுக்குள் விழுந்துள்ளார். இதையடுத்து, சக மீனவர்கள் மீட்டுள்ளனர். ஆனால் அவர் அதற்குள் பரிதாபமாக இறந்து விட்டார். இதையடுத்து அவரது உடலை கரைக்கு காெண்டு வந்தனர்.
பின்னர், அவரது உடல் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து தூத்துக்குடி மரைன் காவல் நிலைய ஆய்வாளர் பேச்சிமுத்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். நடுக்கடலில் தவறி விழுந்து மீனவர் உயிரிழந்த சம்பவம் சக மீனவர்கள் மற்றும் அவரது உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.