தூத்துக்குடி மாநகரில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில், அமைக்கப்பட்டுள்ள 100 அடி உயரக் கொடிக் கம்பத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். மேலும், புனரமைக்கப்பட்ட மாநகராட்சி மத்திய அலுவலகத்தினை கனிமொழி எம்.பி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மேலும், மழை வெள்ள பதிப்பின் போது சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி அதிகாரிகள், பணியாளர்களுக்குப் பரிசுகள் மற்றும் விருதுகள் வழங்கி கௌரவித்தார்.
அதே போல், தூத்துக்குடியில் ஐந்தாவது புத்தகக் கண்காட்சி மற்றும் நெய்தல் கலை விழாவையொட்டி நடமாடும் விழிப்புணர்வு வாகன நூலகத்தைக் கனிமொழி கருணாநிதி எம்.பி கொடியசைத்து துவக்கி வைத்தனர். புத்தகத் திருவிழா மற்றும் நெய்தல் கலை விழா குறித்து பேருந்துகளில் ஒட்டப்பட்ட விளம்பரம் ஸ்டிக்கரை பார்வையிட்ட கனிமொழி, துண்டுப்பிரசுரங்களைப் பொதுமக்களுக்கு அளித்தார்.
மாகாத்மா காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, பழைய மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள திருஉருவச்சிலைக்கு மாலை அணிவித்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மேலும், தூத்துக்குடியில் ஐந்தாவது புத்தகக் கண்காட்சி மற்றும் நெய்தல் கலை விழாவையொட்டி விளம்பர மற்றும் விழிப்புணர்வு பலூன் ஸ்மாட் சிட்டி பழைய பேருந்து நிலையத்தில் பறக்கவிடப்பட்டது.
இந்நிகழ்வில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மதுபாலன், தூத்துக்குடி மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.