துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (01.10.2024), விருதுநகர் மாவட்டத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தில் ஊராட்சி பகுதிகளை சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கியதைத்தொடர்ந்து,
தூத்துக்குடி மாநகராட்சி அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் முன்னிலையில், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஊராட்சி பகுதிகளில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.
பின்னர் அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில்:-
தமிழ்நாடு பல்வேறு துறையில் முதலிடம் பெற்று வருகிறது. அதேபோல் விளையாட்டுத்துறையில் முதலிடமாக வளரும் நோக்கில் ஒவ்வொரு கிராமத்திலுள்ள இளைஞர்களிடம் உள்ள தனித்திறமையை வெளிகொணரும் நோக்கில் அனைத்து கிராம பஞ்சாயத்துகளுக்கும் 33 வகையான விளையாட்டு உபகரணங்கள் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. விளையாட்டு உபகரணங்கள் தொகுப்பில் (கிரிக்கெட், கையுந்துப்பந்து, கால்பந்து, எறிபந்து மற்றும் உடற்பயிற்சி உபகரணங்கள், இதனுடன் சேர்த்து கிரிக்கெட், சிலம்பம், டென்னிகாய்ட் ஸ்கிப்பிங் ரோப், செஸ் போர்டு, இறகுப்பந்து போன்ற விளையாட்டு உபகரணங்கள்) தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 403 கிராம பஞ்சாயத்துகளுக்கும் மக்கள் தொகை அடிப்படையில் 478 விளையாட்டு தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
இன்றைய இளைஞர்கள் கைபேசி மற்றும் தொலைகாட்சிகளில் பொழுதை கழித்து வருகிறார்கள். அதனை தவிர்க்கும் விதமாக அனைத்து பஞ்சாயத்து தலைவர், செயலர்கள் கிராமப்புற இளைஞர்களை பல்வேறான விளையாட்டுப் போட்களில் கலந்து கொள்ள இந்த விளையாட்டு உபகரணங்களை வழங்கி பயிற்சி மேற்கொள்வதற்கும், பயிற்சி பெற்ற வீரர் / வீராங்கனைகளை முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் இதர விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள வழிவகை செய்யும் நோக்கிலும் விளையாட்டுகளில் ஈடுபடும் இளைஞர்கள் தவறான செயல்களில் ஈடுபடாமல் உடல் ஆரோக்கியம் மற்றும் மனநலத்தினை பாதுகாக்கவும் இவ்உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் விளையாட்டுத்துறையில் பதவியேற்றவுடன் விளையாட்டில் பன்னாட்டு, தேசிய அளவில் சாதனை புரிந்த வீரர் / வீராங்கனைகளுக்கு ஊக்கத் தொகை வழங்கியும், அவர்களை அடுத்த நிலைக்கு அழைத்துச் சென்று விளையாட்டுத்துறையை மேம்படுத்தி வருகிறார்கள். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 403 கிராம பஞ்சாயத்துகளுக்கு மக்கள் தொகை அடிப்படையில் விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்பு (Sports Kit) வழங்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட போட்டிகளில் 2537 வீரர், வீராங்கனைகள் வெற்றி பெற்றுள்ளார்கள் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மதுபாலன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செல்வி.ஐஸ்வர்யா, தூத்துக்குடி மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட விளையாட்டு அலுவலர் அந்தோணி அதிஷ்டராஜ், மண்டலத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், விளையாட்டு வீரர், வீராங்கனைகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.