தூத்துக்குடியில் தலைமை ஆசிரியை வீட்டில் 7 பவுன் தங்க நகையை திருடியதாக பணிப்பெண் உட்பட 2பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி சக்தி விநாயகர் புரம் 7வது தெருவைச் சேர்ந்தவர் லோகநாதன் மனைவி அலமேலு (54). இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியை ஆக வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டில் தூத்துக்குடி நந்தகோபால புரத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மனைவி மாரியம்மாள் (46) என்பவர் பணிப்பெண் ஆக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 29ஆம் தேதி அலமேலு வீட்டில் பீரோவில் இருந்த 7 பவுன் தங்கச் செயின் திருடு போய்விட்டது. இதுகுறித்து அவர் வடபாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில், அவரது வீட்டின் பணிப்பெண் மாரியம்மாள் மற்றும் அவரது தம்பி, சங்கரநாராயணன் மகன் இசக்கிமுத்து (43) என்பவருடன் சேர்ந்து நகையை திருடியது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அக்காள், தம்பி இருவரையும் கைது செய்து 7 பவுன் நகையை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து உதவி ஆய்வாளர் சிவக்குமார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.