தூத்துக்குடி மாநகராட்சி சாதாரண கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் இன்று காலை நடந்தது. மாநகராட்சி ஆணையர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
கூட்டத்தில் அதிமுக கொறடா வழக்கறிஞர் மந்திரமூர்த்தி பேசும் போது:-
மதுரை உயர்நீதிமன்ற நீதிபதியின் அறிவுறுத்தலின் படி தூத்துக்குடி மாநகர மக்களுக்கு தாமிரபரணி நதியில் இருந்து வரும் நீர், கழிவு நீர் கலக்காத சுத்தமான குடிநீரை வருவதை உறுதி செய்ய வேண்டும். தூத்துக்குடி மாநகரத்தில் உள்ள அம்மா உணவகங்களை முறையாக பராமரித்து ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தூத்துக்குடி மாநகர பகுதியில் உள்ள தெப்பக்குளம் சுகாதார சீர்கேடாக உள்ளது. ஆகவே அதனை முழுமையாக சீர்படுத்திட வேண்டும். பருவமழை வருவதற்கு முன்பு தூத்துக்குடி மாநகர மக்களை வெள்ளநீர் பாதிக்காத வண்ணம், முன் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கடந்த மழை வெள்ளத்தின் போது ஏற்பட்ட பாதிப்பு போல் மீண்டும் ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தனியார் இடங்களில் தேங்கியிருக்கும் மழை நீரை அகற்றுவதற்கும், வரும் மழைக் காலங்களில் தனியார் இடங்களில் மழைநீர தேங்காமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுகவின் சார்பாக தூத்துக்குடி மாநகராட்சியிடம் வலியுறுத்துவதாக பேசினார்.
பின்னர் பேசிய மேயர் ஜெகன் பெரியசாமி :-
தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலக்கவில்லை. இது வெறும் வதந்தி தான். தூத்துக்குடிக்கு சுத்தமான சுகாதாரமான குடிதண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தெப்பக்குளம் தற்போது சுத்தமாக உள்ளது. மீன்கள் மிகவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. பருவ மழையை கணக்கில் கொண்டு மழைநீர் தேங்காத அளவிற்கு சாக்கடையில் தண்ணீர் செல்வதற்கு அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பக்கிள் ஓடை முழுவதும் சீரமைக்கப்பட்டு மழைநீர் செல்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி அம்மா உணவகம் பெயர் கூட மாற்றம் செய்யாமல் தூத்துக்குடியில் மக்களுக்கு வழக்கமான மற்றும் சுகாதாரமான முறையில் உணவு வழங்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.