தூத்துக்குடி டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு ம்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத ரூ.1.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில், டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம் மற்றும் கிடங்கு அமைந்துள்ளது. இங்கு டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுபான நிறுவனங்களில் இருந்து பங்குத் தொகை பெறுவதாக, தூத்துக்குடி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, தூத்துக்குடி டிஎஸ்பி பீட்டர் பால்துரை தலைமையில், காவல் ஆய்வாளர் சுதா மற்றும் போலீசார், நேற்று மாலையில் சிப்காட் வளாகத்தில் உள்ள டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அலுவலகத்தில் இருந்து யாரும் வெளியில் செல்ல முடியாத வகையிலும், யாரையும் தொடர்பு கொள்ளாத வகையிலும் அனைவரது கைப்பேசிகளையும் கைப்பற்றி, கதவுகளை பூட்டி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில், ஊழியர்கள் மகேஷ், லிங்கராஜ் ஆகியோரிடம் சுமார் ரூ.1.50 லட்சம் கணக்கில் காட்டப்படாத பணம் இருந்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார், தொடர்ந்து அலுவலகம் முழுவதும் சோதனை மேற்கொண்டனர். மேலும், இது குறித்து விசாரித்து வருகின்றனர்.