தூத்துக்குடியில் டாஸ்மாக் பாரில் ஒன்றில் ஏற்பட்ட தகராறில் இளைஞரை மதுபாட்டிலால் தாக்கியதாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் (25). இவர் 2வது ரயில்வே கேட் அருகே உள்ள டாஸ்மாக் பாரில் நேற்று முன்தினம் மது அருந்தி கொண்டிருந்தாராம். அப்போது அங்கிருந்த மட்டக்கடையைச் சேர்ந்த ஜான் (26), முனியசாமி கோயில் தெருவைச் சேர்ந்த ராமலட்சுமணன் (29) மற்றும் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த சந்தனராஜ் (24) ஆகிய 3 பேரும் பிரகாஷிடம் தகராறில் ஈடுபட்டனராம்.
இதில் ஆத்திரமடைந்த 3 பேரும் பிரகாஷை மது பாட்டிலால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த பிரகாஷை மீட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில், வடபாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஜான், ராமலட்சுமணன், சந்தனராஜ் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.