• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் இணையதளத்தில் பகுதி நேர வேலை என கூறி 21 லட்சம் பணம் மோசடி... ரூ.3,23,000 பணம் மீட்பு

  • Share on

தூத்துக்குடியில் இணையதளத்தில் பகுதி நேர வேலை என்று டெலிகிராம் செயலியில் லிங்க் அனுப்பி அதன் மூலம் ரூபாய் 21 லட்சம் பணம் மோசடி செய்த வழக்கில் ரூபாய் 3,23,000 பணம் மீட்கப்பட்டது.


தூத்துக்குடி  மாவட்டம் விளாத்திகுளத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு இணையதளத்தில் பகுதி நேர வேலை வாய்ப்பு என்று மர்ம நபர்கள் மூலம் டெலிகிராம் செயலியில் லிங்க் வந்துள்ளது. இதனையடுத்து அந்த இளைஞர் அந்த லிங்க்-ஐ கிளிக் செய்து அதில் கூறப்பட்டுள்ள இணையதளத்தில் முதலீடு செய்து அதன் மூலம் சிறிய தொகையை லாபமாக பெற்றுள்ளார்.


இதனையடுத்து அதிக மூதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என்று தொடர்ந்து அந்த மர்மநபர்கள் கூறியதையடுத்து அதனை நம்பி மேற்படி இளைஞர் பல்வேறு தவணைகளாக அவர்கள் கூறிய 16 வங்கி கணக்குகளுக்கு மொத்தம் ரூபாய் 21,07000 பணத்தை அனுப்பி உள்ளார். இதனையடுத்து மேற்படி இளைஞர் முதலீடு செய்த பணத்திற்கு லாபம் வரவில்லை என்று அந்த மர்ம நபர்களிடம் தொடர்பு கொண்டபோது அவர்கள் கூடுதலாக 15 லட்சம் பணத்தை கட்டினால் மொத்தமாக லாபம் பெறலாம் என்று கூறியுள்ளனர்.

 

பின்னர் தான் மோசடி செய்யப்பட்டதையறிந்த மேற்படி இளைஞர் இதுகுறித்து NCRPல் (National Cyber crime Reporting Portal) புகார் பதிவு செய்துள்ளார்.


மேற்படி இளைஞர் அளித்த புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவுபடி, தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் சகாய ஜோஸ் அவர்கள் மேற்பார்வையில், சைபர் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் (பொறுப்பு) சோமசுந்தரம் தலைமையில் போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து மோசடி செய்த நபர்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.


அவரது உத்தரவின்பேரில் மேற்படி தனிப்படை போலீசார் தொழில் நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டு மேற்படி பாதிக்கப்பட்ட இளைஞர் அனுப்பிய நபர்களின் வங்கி கணக்குகளில் இருந்த ரூபாய் 28,22,141/- மோசடி பணத்தை முடக்கம் (Freeze) செய்து நீதிமன்ற உத்தரவுப்படி மேற்படி முடக்கம் (Freeze) செய்த பணத்தில் ரூபாய் 3,23,000/- பணத்தை பாதிக்கப்பட்ட இளைஞரின் வங்கி கணக்குக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் மீதி பணத்தை மீட்கவும் சம்மந்தப்பட்ட மோசடி நபர்களை கண்டுபிடித்து கைது செய்யவும் சைபர் குற்றப்பிரிவு போலீசார் சட்டரீதியாக தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்று பகுதி நேர வேலை, ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம், ஸ்டார் ரேட்டிங் கொடுப்பதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்று இணையதளம், வாட்ஸ்ஆப், டெலிகிராம் போன்றவற்றின் மூலம் வரும் போலியான விளம்பரங்களை நம்பி அதில் வரும் லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம் என்றும், இளைஞர்கள் பெண்கள் ஆகியோர் இதுபோன்ற போலியான விளம்பரங்களை தவிர்த்து சைபர் குற்றங்களிலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளார்

  • Share on

தூத்துக்குடியில் அக்.6ல் ருத்ர தர்ம சேவா சார்பில் காளி ஊர்வலம்!

  • Share on