தூத்துக்குடியில் தசரா பண்டிகையை முன்னிட்டு வருகிற அக்.6ஆம் தேதி ருத்ர தர்ம சேவா சார்பில் காளி வேடமணிந்த பக்தர்கள் ஊர்வலம் நடைபெற உள்ளது.
தூத்துக்குடியில் தசரா பண்டிகையை முன்னிட்டு ருத்ர தர்ம சேவா சார்பில் ஆண்டு தோறும் காளி ஊர்வலம் நடத்தப்பட்டு வருகிறது. அதே போல் இந்த ஆண்டும், 14 வது ஆண்டு காளி ஊர்வலம் அக்டோபர் 6ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி அளவில் நடைபெற உள்ளது. இந்த ஊர்வலமானது தூத்துக்குடி பாளை ரோட்டில் உள்ள வேம்படி இசக்கிஅம்மன் கோவில் முன்பு தொடங்கி, தூத்துக்குடி சிவன் கோவில் முன்பு நிறைவடைகிறது.
இதில், தமிழக பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடனும், சுவாமி, அம்பாளின் பிரமாண்டமான திருவுருவ அலங்கார ஊர்திகளின் ஆரவார அணிவகுப்புடனும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் நீங்கிட வேண்டி சூலம் ஏந்திய 108 பெண்களின் பிரம்மாண்ட அணிவகுப்பும் நடைபெற உள்ளது. மேலும், காளி ஊர்வலத்தில் கலந்து கொள்ளும் தசராகுழுக்களில், எல்லா வேடமும் அணிந்து சிறந்த முறையில் கலந்து கொள்ளும் 6 குழு தேர்வு செய்து அவர்களுக்கு பரிசும் வழங்கப்படுகிறது என்று ருத்ர தர்ம சேவா நிறுவனர் தா.வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.