விமான நிலையத்திற்கு அருகே பயணிகள் பயன்படுத்திய முழுஉடல் கவசம், முக கவசம் ஆகியவை ஆங்காங்கே கிடப்பதால் நோய் பரவும் அபாயம் உள்ளது.
உலக அளவில் கொரோனா அச்சுறுத்தல் இரண்டாவதாக வலம் வந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் சர்வதேச விமான பயணிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
இந்நிலையில் உள்நாட்டு விமான பயணம் மேற்கொள்ளும் பயணிகள் கர்மாவில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்வதற்காகவும், சமூக நலனுக்காகவும், முழு உடல் பாதுகாப்பு கவச உடைகள் மற்றும் முக கவசம் ஆகியவற்றை அணிந்து பயணம் செய்ய வேண்டும் என அரசுகள் அறிவுறுத்தியுள்ளன.
அதன்படி விமான பயணிகளும் பயணித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கும் மறுமார்க்கமாக சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கும் உள்நாட்டு விமான போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் இருந்து தூத்துக்குடி வரும் பயணிகள் கொரோனா பரிசோதனை செய்த பின்னர் விமான நிலையத்திலிருந்து வெளியே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். அவ்வாறு வெளியேறும் பட்சத்தில் பயணிகள் அணிந்து வந்த முழு உடல் பாதுகாப்பு கவச உடைகள் மற்றும் முக கவசம் ஆகியவற்றை சாலைகளில் திறந்தவெளியில் வீசி செல்வது வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் நோய் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சமும் மக்களிடையே நிலவுகிறது. இதை தடுக்க மாவட்ட நிர்வாகமும் விமான நிலைய அதிகாரிகளும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.