இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் 2024 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை இன்று(10.9.2024) சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்கில் தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் தருவை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில்:
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2024-25, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், பொதுப் பிரிவினர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் அனைத்து வயது மாற்றுத்திறனாளிகள் என ஐந்து பிரிவுகளில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகிறது. இப்போட்டிகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் இன்று சிவகங்கை மாவட்டத்திலிருந்து தொடங்கி வைத்துள்ளார்கள். பின்னர் நமது மாவட்டத்தில் விளையாட்டுப்போட்டிகளை தொடங்கியுள்ளோம்.
மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் இன்று 10.9.2024 முதல் 24.9.2024 வரை நடைபெறும். இப்போட்டியில் பங்கேற்க இணையதள முன்பதிவு 04.08.2024 முதல் முன்பதிவு செய்யப்பட்டு 17885 நபர்கள் நமது மாவட்டத்தில் அதாவது, 12 வயது முதல் 19 வயது வரை உள்ள பள்ளி மாணாக்கர்கள் பிரிவில் 9889 நபர்களும், 17 வயது முதல் 25 வயது வரை கல்லூரி மாணாக்கர்கள் பரிவில் 5165 நபர்களும், 15 வயது முதல் 35 வயது வரை பொதுப் பிரிவினர்கள் பிரிவில் 1527 நபர்களும், அனைத்து வயது மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 439 நபர்களும் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் பிரிவில் 865 நபர்களும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். இவ்விளையாட்டுப் போட்டிகள் 5 வகையான பிரிவுகளில் 57 வகையான விளையாட்டுக்கள் மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவில் நடத்தப்பட உள்ளது.
அந்தவகையில், இன்றைய தினம் முதற்கட்டமாக 12 வயது முதல் 19 வயது வரை உள்ள பள்ளி மாணாக்கர்கள் பிரிவிற்கான விளையாட்டுப்போட்டிகளை தொடங்கி வைத்துள்ளோம். பள்ளி மாணவ / மாணவியர்கள் பிரிவில் மாணவ, மாணவியர்களுக்கான இறகுப்பந்து, மேஜைப்பந்து, கேரம், கூடைப்பந்து, கால்பந்து, கபாடி, வளைகோல்பந்து, வாலிபால் ஆகிய போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கிலும், கிரிக்கெட் போட்டிகள் வ.உ.சி. கல்லூரி விளையாட்டு மைதானத்திலும் மற்றும் கோ-கோ, கைப்பந்து ஆகிய போட்டிகள் காமராஜ் கல்லூரி விளையாட்டு மைதானத்திலும் நடைபெறும். தொடர்ந்து, தடகளப் போட்டிகள் வருகின்ற 12.9.2024 அன்று நடைபெறவுள்ளது.
இதனை தொடர்ந்து, கல்லூரி மாணவ / மாணவியர்களுக்கு நீச்சல் போட்டிகள் 11.9.2024 மற்றும் 12.9.2024 ஆகிய நாட்களிலும், மீதமுள்ள போட்டிகள் 16.9.2024 ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. பொதுப் பிரிவினர்களுக்கான போட்டிகள் 21.9.2024 அன்றும், அனைத்து வயது மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகள் 23.9.2024 அன்றும், தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான போட்டிகள் 24.9.2024 அன்றும் நடைபெறவுள்ளது.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரின் சீரிய முயற்சியால் இவ்வாண்டுக்கான தனிநபர் மற்றும் குழுப் போட்டிகளுக்கான மொத்த பரிசுத் தொகை ரூ.37 கோடியாக உயர்த்தி வழங்கப்படவுள்ளது. இப்போட்டிகளில் வழங்கப்படும் சான்றுகள் மூலம் உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் சலுகைகளும் பெற இயலும். மாநில அளவில் தனி நபர் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.75 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும். குழுப் போட்டிகளில் பங்குபெற்று வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.75 ஆயிரமும், இரண்டாம் பரிசாக தலா ரூ.50 ஆயிரமும், மூன்றாம் பரிசாக தலா ரூ.25 ஆயிரமும் வழங்கப்படவுள்ளது.
போட்டிகளில் பங்கேற்க வந்திருக்கக்கூடிய பல்வேறு விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் அனைவரும் தங்களது முழுத்திறமையையும் வெளிபடுத்தி மாநில அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்கு நமது விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் அனைவரும் பெறும் முயற்சி எடுக்க வேண்டும். நமது மாவட்டத்திலிருந்து அதிகப்படியான விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டுப்போட்டிகளில் தேசிய அளவில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார்கள்.
வீரர்கள், வீராங்கனைகள் அவர்களின் திறமைகளை வெளிபடுத்த முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் ஒரு நல்ல களமாக அமையும். இந்த விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக நடைபெற்று நமது வீரர்கள் வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி தங்களது திறமைகளை மிகச்சிறப்பாக வெளிபடுத்துவார்கள் என்ற நம்பிக்கையில் இந்த விழாவை தொடங்கி வைப்பதில் பெறும் மகிழ்ச்சி அடைகிறேன் என மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் , மாநகராட்சி ஆணையாளர் மதுபாலன் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அந்தோணி அதிஷ்டராஜ், உடற்கல்வி ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், விளையாட்டு வீரர் வீராங்கனைகள் பலர் கலந்து கொண்டனர்.