தூத்துக்குடி மாவட்டம், வாஞ்சி மணியாச்சி ரயில்வே நிலையத்தில் இன்று ( செப்டம்பர் 6 ) நடைபெற இருந்த ரயில் மறியலில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக சண்முகையா எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் அருகே வாஞ்சி மணியாச்சி சந்திப்பு ரயில் நிலையத்தை, ஓட்டப்பிடாரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த சுமார் 70 க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மாணவி மாணவிகள் பயன்படுத்தி வந்தனர். மேலும் வாஞ்சி மணியாச்சி சந்திப்பு வழியாக செல்லக்கூடிய பெரும்பாலான ரயில்கள் வாஞ்சி மணியாச்சியில் நின்று சென்ற நிலையில் கொரோனா ஊரடங்கு காலத்திற்கு பிறகு பெரும்பாலான ரயில்கள் வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் நின்று செல்வதில்லை.
மேலும், திருநெல்வேலி – தூத்துக்குடி - (06668-06667) திருநெல்வேலி பாசஞ்சர் ரயில் சேவையும் கடந்த ஆகஸ்ட் 19ம் தேதி முதல் ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே அறிவித்தது.
இதனால் சுமார் 70 க்கும் மேற்பட்ட கிராமங்களை சார்ந்த அனைத்து தரப்பு மக்களும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளானர். மேலும் இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், ரயில்வே உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்து ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா மனு அளித்தார். அம்மனுவில் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்ட திருநெல்வேலி – தூத்துக்குடி- (06668-06667) திருநெல்வேலி பாசஞ்சர் ரயில்வே மீண்டும் இயக்க வேண்டும், வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் கொரோனா ஊரடங்கு காலத்திற்கு முன்னர் நின்று சென்ற ரயில்கள் அனைத்தும் நின்று செல்ல வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனுவினை வழங்கினார்.
மேற்படி நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாத பட்சத்தில் செப்டம்பர் 6 அன்று காலை 10 மணி அளவில் வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா தலைமையில் சுமார் 70-க்கும் மேற்பட்ட கிராமங்கள் சேர்ந்த பொதுமக்கள் முன்னிலையில் மாபெரும் மறியல் போராட்டம் நடைபெறும் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், திருநெல்வேலி - தூத்துக்குடி பயணிகள் இரயில் மீண்டும் அடுத்த 6 மாதங்களுக்கு (ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து) இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதனையடுத்து, இன்று நடைபெற இருந்த ரயில் மறியல் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா தெரிவித்தார்.