புதூர் அருகே பயணியர் பேருந்து நிழற்குடையில், எதிர்பாராத விதமாக வேன் மோதி விபத்திகுள்ளாகி, பாதிக்கப்பட்டவர்களை, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் உடனிருந்து மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தொகுதி, புதூர் ஊராட்சி ஒன்றியம், சல்லிசெட்டிபட்டி கிராமத்தில் உள்ள பயணியர் பேருந்து நிழற்குடையில், எதிர்பாராத விதமாக, இன்று (7.2.2021) காலை சுமார் 11 மணி அளவில், மேலக்கரந்தை அருகே உள்ள வெம்பூர் கிராமத்தில் இருந்து ஆட்களை ஏற்றி, சிப்பிகுளம் செல்வதற்காக வந்து கொண்டிருந்தபோது, வேன் மோதி விபத்திற்குள்ளானது. இதில் ஓட்டுனர் உட்பட வேன் உள்ளே இருந்த பலரும் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தனர்.
இதனையடுத்து, அவ்வழியாக வந்த விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், புதூர், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர்கள், சல்லிசெட்டிபட்டி கிராம பொதுமக்கள் உள்ளிட்டோர், விபத்தில் சிக்கியவர்களை உடனிருந்து மீட்டு, ஆம்புலன்ஸ் வாகனம், சட்டமன்ற உறுப்பினர் வாகனம் மற்றும் அவருடன் வந்த அதிமுக கட்சி நிர்வாகிகள் வாகனம் மூலம், அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். முன்னதாக காயம்பட்டவர்களுக்கு, புதூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி அளிக்கப்பட்டது.
அதனையடுத்து, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று, விபத்தில் சிக்கியவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை குறித்து பார்வையிட்டு, நல்ல முறையில் சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், பாதிப்பு அதிகமானவர் களை, மேல் சிகிச்சைக்கான மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பும், சோகமும் ஏற்பட்டது. இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.