ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் அனைத்து அரசு பேருந்துகளும் வந்து செல்ல என வலியுறுத்தி சுதந்திர தினமான இன்று அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் நடைபெற இருந்த சாலை மறியல் போராட்டம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற சமாதான கூட்டத்தில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் வந்து செல்லாமல் புதுக்குடி வழியாக பல அரசு மற்றும் தனியார் பேருந்துகள் சென்று வருகிறது. பொதுமக்கள் பலமுறை போராடி ஒவ்வொரு முறையும் குறிப்பிட்ட தினங்களுக்கு மட்டும் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் பேருந்துகளை இயக்குவதும் மீண்டும் அதனை புறக்கணித்து செல்வதும் வாடிக்கையாக நடத்து வருகிறது. இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் அனைத்து அரசு பேருந்துகளும் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் சுதந்திர தினத்தன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்து இருந்தனர்.
இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தாசில்தார் சிவகுமார் தலைமை தாங்கினார். டிஎஸ்பி மாயவன் முன்னிலை வைத்தார். அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர் ஜெகதீசன், ஸ்ரீவைகுண்டம் இன்ஸ்பெக்டர் பத்மநாபபிள்ளை, பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் தியாகராஜன், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி தேசிய செயலாளர் ஸ்ரீவை சுரேஷ் தலைமையில் அக்கட்சியினர் சுமார் 30க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், பெரும்பாலான அரசு பேருந்துகள் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் வந்து செல்லாமல் புதுக்குடி வழியாக நேரடியாக சென்று வருகின்றன. ஸ்ரீவைகுண்டம் டிப்போவில் இருந்து இயக்கப்படும் நான்கு பேருந்துகள் கூட ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் வந்து செல்லாமல் இயக்கப்படுகிறது. இதனால் குழந்தைகளும் பெண்களும் வயது முதிர்ந்தவர்களும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி என வருகின்றனர் என அகில இந்திய பார்வர்டு கட்சியினர் பேசினர். தாசில்தார் சிவகுமார் பேசுகையில், அரசு பேருந்து ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் வந்து செல்லாமல் செல்வது குறித்து பல்வேறு புகார்கள் மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் சார்பில் அளிக்கப்பட்டு வருகிறது. நீண்ட காலமாக நீடிக்கும் இப் பிரச்சனையை உடனடியாக தீர்க்க கூறி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். என்றார். இதற்கு பதில் அளித்து பேசிய அரசு போக்குவரத்து துறையினர், ஸ்ரீவைகுண்டத்தில் பழைய பாலமும் புதிய பாலமும் இணையும் ஆழ்வார்தோப்பு சாலையிலும் பழைய தாலுகா அலுவலகம் அருகே நாலுமுக்கு சந்தியிலும் போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். அதற்கான நடவடிக்கையை பேரூராட்சி நிர்வாகத்தினர் காவல்துறை உதவியோடு மேற்கொள்ள வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. மேலும், ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் அனைத்து பேருந்துகளும் வந்து செல்வது குறித்து இறுதி முடிவு எடுக்க அடுத்த வாரம் போக்குவரத்து கழக பொது மேலாளர் முன்னிலையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி தேசிய செயலாளர் ஸ்ரீவை சுரேஷ் சுதந்திர தினத்தன்று நடத்துவதாக இருந்த சாலை மறியல் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக தெரிவித்தார்.