தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே ஆனந்தபுரத்தில் ரஞ்சி ஆரோன் நினைவு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று சாத்தான்குளம் ஒன்றியத்திற்கு உட்பபட்ட செட்டிகுளம், எழுவரைமுக்கி, பன்னம்பாறை, பழங்குளம், பிடாநேரி என ஐந்து கிராமங்களுக்கு தமிழக அரசு சார்பில் மக்களுடன் முதல்வர் முகாம் நடந்தது.
ஏற்கனவே ஐந்து முகாம்கள் சாத்தான்குளம் சுற்று வட்டாரப்பகுதியில் நடந்துள்ள நிலையில் இது கடைசி முகாமாகும். இந்த நிலையில் இந்த மக்களுடன் முதல்வர் முகாம் ஆனந்தபுரம் ரஞ்சி ஆரோன் நினைவு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. இந்த வளாகத்தில் ரேடியோ மைக் செட் அமைத்து ஒவ்வொரு துறைக்கு தனியாக டேபிள் சேர் அமைத்து அதிகாரிகள் அமர்ந்திருந்தனர். ஏற்கனவே முகாமில் கொடுக்கப்பட்ட மனுக்களுக்கு தீர்வு கிடைக்காத நிலையில் குறைவான அளவிலேயே பொதுமக்கள் வருகை தந்தனர்.
இந்த நிகழ்ச்சியை கோட்டாட்சியர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். பள்ளி வளாகத்தில் மைக் செட் வைத்து பேசியதால் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளின் படிப்பு பாதிக்கப்பட்டது. மேலும் மாணவ மாணவிகளுக்கு பாடம் நடத்த முடியாமல் ஆசிரியர்களும் பெரிதும் அவதி அடைந்தனர்.
ஆனால் அதையெல்லாம் நினைத்துப்பார்க்காத அதிகாரிகள் எதுவுமே நடக்காதது போல் இன்று தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளில் இதுவும் ஒன்று என பணியில் கவனம் செலுத்தி சேரை விட்டு நகராமல் அமர்ந்து கொண்டனர். இதுபோல் நிகழ்ச்சிகள் தனியார் மண்டபத்திலோ அல்லது பொது இடங்களிலோ வைக்காமல் பள்ளி வளாகத்தில் வைப்பதால் மாணவ மாணவிகளின் படிப்பு பாதிக்கப்படுகிறது. எனவே வரும் காலங்களில் தமிழக அரசு இதை கருத்தில் கொண்டு மக்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியை பொது வெளியில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.