அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தினை விட கோவில்பட்டியில் மினிபஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதை கண்டித்து மினிபஸ்சை மறித்து சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் இயக்கப்பட்டு வரும் மினிபஸ்களில் தமிழக அரசு நிர்ணயம் செய்த தொகையை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவதாகவும், குறைந்தபட்ச கட்டணம் ரூ.2 என்று அரசு நிர்ணயம் செய்துள்ள நிலையில் கோவில்பட்டியில் உள்ள மினிபஸ்களில் ரூ.10 வசூலிக்கப்பட்டு வருவதாகவும், அவ்வாறு அரசு நிர்ணயம் செய்துள்ள தொகையை விட அதிக கட்டணம் வசூலிக்கும் மினிபஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 5வது தூண் அமைப்பின் தலைவர் சங்கரலிங்கம் தலைமையில் சமூக ஆர்வலர்கள் மினிபஸ்களில் பயணம் செய்து அரசு நிர்ணயம் செய்த கட்டண தொகை கொடுத்து டிக்கெட் கேட்ட போது, மினிபஸ் நடத்துனர்கள் அதை வாங்க மறுத்து தாங்கள் நிர்ணயம் செய்துள்ள கட்டணத்தினை தரும்படி கேட்டதால் இருதரப்புக்கு இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து 5வது தூண் சங்கரலிங்கம் தலைமையில் சமூக ஆர்வலர்கள் ராஜேஷ் கண்ணா, பரமசிவம், சுதாகர், மாரிமுத்து ஆகியோர் மினி பஸ் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அதிக கட்டணம் வசூலிக்கும் மினிபஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவிலபட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழியபாண்டியனிடம் கோரிக்கை மனு வழங்கினர். மேலும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்திலும் புகார் மனு அளித்துள்ளனர். இதனால் கோவில்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.