ஓட்டப்பிடாரம் அருகே நாகம்பட்டி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் போதைப் பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், மணியாச்சி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் லோகேஸ்வரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், 'இன்று உலகையே அச்சுறுத்திக் கொண்டு இருப்பது போதைப் பொருள். எந்தவிதமான வயது பாலின பாகுபாடு இன்றி போதைப்பொருளை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக பள்ளி கல்லூரி மாணவர்களைடையே அதிகரித்து வருவதாக புள்ளிவிபரம் தகவல் மூலம் அறிய முடிகிறது. கல்வி நிறுவனங்களின் அருகாமையில் எந்த போதைப் பொருளையும் விற்க கூடாது. அவ்வாறு விற்பனை செய்தால் காவல் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும் என்றார்'. பசுவந்தனை காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரவீந்திரன் போதைப் பொருளால் வரும் தீங்குகள் பற்றியும், மாணவர்களின் இலக்கு, பட்டம் பெற்று நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என்பதாக இருக்க வேண்டும் என்றார். கருத்தரங்கில் அனைத்து துறை பேராசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.