காஷ்மீர் லடாக் பகுதியில் வாகனத்தில் வெடிபொருட்களை ஏற்றிச் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் சிக்கி கோவில்பட்டியை சேர்ந்த ராணுவ வீரர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அடுத்துள்ள தெற்கு திட்டங்குளத்தினை சேர்ந்த கந்தசாமி மகன் கருப்பசாமி (34). இவர் கடந்த 14 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி தமயந்தி என்ற மனைவியும், கன்னிகா (7), வைஷ்ணவி (5), பிருதீப்ராஜ் (1) ஆகிய 3 குழந்தைகளும் உள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் விடுமுறைக்காக அவர் ஊருக்கு வந்துள்ளார். பின்னர் மார்ச் மாதம் மீண்டும் ராணுவத்தில் பணிக்கு சென்றுள்ளார்.
காஷ்மீர் மாநிலம் லாடக் பகுதியில் அவர் பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று அவரது இல்லத்திற்கு அவருடன் பணியாற்றிய நண்பர் ஒருவர் தொடர்பு கொண்டு அவர், லடாக் பகுதியில் நடந்த விபத்தில் இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த கருப்பசாமி குடும்பத்தினர் அவர் பணிபுரிந்த இடத்திற்கு தொடர்பு கொண்டு கேட்டனர். அப்போது, லடாக் பகுதியில் இருந்து வாகனத்தில் வெடி பொருட்களை ஏற்றி சென்ற போது ஏற்பட்ட விபத்தில் கருப்பசாமி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதை அறிந்த குடும்பத்தினர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.