தூத்துக்குடி மாவட்டம், சிவத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர்களான பொன்பாண்டி மகன் பாலமகேஷ் (19) என்பவருக்கும் ஹரிகிருஷ்ணன் மகன் சிவராமன் (19) என்பவருக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 09.08.2024 அன்று சாயர்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மீன்கடை தெரு பகுதியில் பாலமகேஷ் மற்றும் செவத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்த பவுன்ராஜ் மகன் குமரன் (24), கூட்டாம்புளி திருமலையாபுரம் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் மகன் சிவபிரகாஷ் (21) ஆகியோர் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த சிவராமன் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த சிவராமனின் நண்பரான ஜெயபால் மகன் தீபன்ராஜ் (19) ஆகிய இருவரும் பாலமகேஷை முறைத்து பார்த்துள்ளனர். இது குறித்து மேற்படி 3 பேரும் அவர்கள் இருவரையும் விசாரித்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த தீபன்ராஜ், தீபன்ராஜின் தந்தை ஜெயபால் (51) மற்றும் செவத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் உதயகுமார் (20) மற்றும் சிலர் சேர்ந்து மேற்படி பாலமகேஷ், குமரன், சிவபிரகாஷ் ஆகிய 3 பேரிடம் தகராறு செய்து கம்பு மற்றும் அரிவாளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து சிவபிரகாஷ் நேற்று அளித்த புகாரின் பேரில் சாயர்புரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மம்முது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு ஜெயபால், தீபன்ராஜ், உதயகுமார் ஆகிய 3 பேரையும் கைது செய்தார். மேலும் இதுகுறித்து சாயர்புரம் காவல் நிலைய போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.