விளாத்திகுளம் அருகே பள்ளிக்குச் சென்ற மாணவன் திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள சிவஞானபுரம் அடுத்த பொம்மையாபுரம் கிராமத்தை சேர்ந்த சுடலைமுத்து என்பவரின் மகன் மகேந்திரன் (12).
இவர் சிவஞானபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், வழக்கம் போல் இன்று காலை ( 10.8.2024 ) சனிக்கிழமை பள்ளிக்குச் சென்ற மகேந்திரன், பள்ளி வளாகத்தில் உள்ள நவாப்பழம் மரத்தில் சக மாணவர்களுடன் சேர்ந்து நவாப்பழம் பறித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, மகேந்திரனுக்கு தொண்டையில் நவாப்பழம் சிக்கி மயக்கம் அடைந்து கீழே விழுந்துள்ளாராம். இதனையடுத்து, சக மாணவர்கள் பள்ளியில் உள்ள ஆசிரியர்களுக்கு தகவலை தெரிவிக்க, ஆசிரியர்களும் உடனே மகேந்திரனை எப்போதும் வென்றான் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்கி கொண்டு சென்றனர்.
மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள், வழியிலேயே மாணவன் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து எப்போதும் வென்றான் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளிக்குச் சென்ற மாணவன் திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.