தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளம் கிராமத்தில் இருந்து கடந்த 21 மற்றும் 23ஆம் தேதி மீன் பிடிக்க சென்ற தருவைகுளம், வேம்பார், மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 22 மீனவர்களை கடந்த ஐந்தாம் தேதி இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்ட 22 மீனவர்களை விடுதலை செய்யவும் மற்றும் இரண்டு விசைப் படகுகளை மீட்டு தர வேண்டும் என்று தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பாமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் டெல்லியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்கள்.
இந்தநிலையில், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தருவைகுளம் மீனவ கிராமத்திற்கு நேரில் சென்று அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும் தமிழ்நாடு அரசு கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக கூறினார்.
அப்போது, திமுக அவைத் தலைவர் மனோகரன், மீனவர் சங்க தலைவர் லூர்துராஜ் அன்புராஜ், விசைப்படகு சங்க தலைவர் புகழ், கென்னடி, அந்தோணி சுரேஷ், மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளர் நிக்குலஸ், கிளை செயலாளர்கள் தயாளன், ஞானப்பிரகாசம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.